3/28/11

5

கூகுள் குரோம் குறள் வெண்பாக்கள்

|
நமது வாழ்வில் இணையம் இரண்டறக் கல்ந்துவிட்ட இன்றைய சூழலில், இணையத்தளங்களைப் பார்க்க உதவும் ப்ரௌசர்கள் இணையத்தில் உலவுபவர்களின் தேவைக்கேற்பவும், ரசனைக்கேற்பவும் தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகின்றன.மோட்டார் பைக்குகள், கார்கள்,ஆடை அணிகலன்கள்,மொபைல்போன்கள் போன்றவை பயனீட்டாளர்களை எவ்விதம் ஈர்க்கின்றன என்பதை அறிந்து அவற்றை உற்பத்தி செய்பவர்கல் தமது தயாரிப்பை உலகச் சந்தையில் நிலைநிறுத்த என்னென்ன உத்திகளைக் கையாளுகிறார்களோ, என்னென்ன புதுமைகளிப் புகுத்துகிறார்களோஅதே போன்றுதான் கண்ணீப் பயனீட்டாளர்களை ஈர்த்து விட அவை சார்ந்த நிறுவனங்கள் துடிதுடிக்கின்றன.உற்பத்தியாளர்களிடையே போட்டி மிகுவது பயனீட்டாளர்களுக்குத்தான் நல்லது.விலைக்குறைவும்,  சிறந்த தரமும் வாய்க்க இது வழிகோலுகிறது.அந்த வகையில் ப்ரௌசர்களிடையே நிலவும் போட்டியானது, பலவித மேம்படுத்தப்பட்ட வசதிகள் பயனீட்டாளர்களுக்குக் கிடைக்க வசதி செய்கிறது. ஏதேனும் புதுமைகளைப் புகுத்த ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு நிபுணர்குழு மூளையைக் கசக்கிப் பிழிந்து கொண்டேதான் இருக்கிறது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு ப்ரௌஸ் செய்ததையும் இன்ற்ய் செய்வதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எவ்வளவு தூரம் ப்ரௌசர்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன என உணர முடியும்.ப்ரௌசர்களைப் பொறுத்தவரையில் பயனீட்டாளர்களின் எதிர்பார்ப்பில் வேகமும் , பாதுகாப்பும்தான் முதலில் நிற்கின்றன.காத்திருப்பையும், காலவிரயத்தையும் தவிர்க்க எந்த விலையையும் கொடுக்கத்தயாராகிவிட்ட மனநிலைக்கு நாம் வந்துவிட்டோம்.உலகம் அகாய விமானத்தில் போகும்போது நாம் மட்டும் மாட்டுவண்டியில் போக விரும்புவதில்லை.அத்தகைய சூழலில் கணினி உலகின் பல துறைகளில் கோலோச்சி வரும் கூகுள் நிறுவனத்தின் குரோம் ப்ரௌசர் குறிஅந்த காலத்தில் பெருமளவு வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளதாக்கப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதில் அப்படி என்னதான் இருக்கிறது என எட்டிப் பார்த்த நாளிலேயே அதன் தீவிர ரசிகனாகிவிட்டேன். இணையப் பக்கங்களைத் திறப்பதில்குரோம் காட்டும் அதிவேகம், அழையா விருந்தாளிகளுக்கு அனுமதி மறுக்கும் பாதுகாப்பு, முழுத்திரைக்காட்சி (full screen view) யைப்போன்று இணையப்பக்கங்களுக்கு அதிக இடம் தரும் எளிமையான தோற்றம், எளிமையான பயன்பாடு, ஆகியவைதான் குரோமின் வெற்றிக்குக் காரணம் என நினைக்கிறேன்!

போகு மிடமெல்லாம் போற்றுவேன் ஈடில்லாக்
கூகுள் குரோமைக் குறித்து.

குறையொன்று மில்லை குரோமிருக்கத் தானே
மறையென்றால் நெட்டே மதம்.

சொடுக்கும் நொடியில் தளங்களைக் கண்டு
அடுக்கும் மலைவான் அளவு.


பிங்கோ பிறவோ எதிலுமே தேடுபொறி
எங்கோ பறக்கும் எழுந்து.

இளமை புதுமை இனிமை எளிமை
வளமை குரோமின் சிறப்பு.

விடைதான் உலவிட வேகமாய் இணையக்
கொடைதானக் கூகுள் குரோம்


மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3/26/11

0

விடை தாரீர்!

|

வந்தியத் தேவனாம் வல்ல வரையனும்
குந்தவை தேவியும் கொண்டதுடன் - நந்தினி
என்னும் பழுவூர் இளவரசி யும்கொண்டு
பொன்னியின் செல்வனும் பார்த்திபனும் - இன்னுமே
எண்ணற்ற மாந்தர் இடங்கள் நிகழ்வுகள்
கொண்டு புதினம் குறைவறப் - பண்ணியே
என்றுந் தமிழர் இதயத்தில் வாழ்ந்திடும்
தன்னிக ரில்லாத் தலைவனைக் கண்டறிந்து
என்னவென் றிங்கே எழுதுவீர் -நன்றாகப்
பின்னூட்டத் தில்தான் பெயர் !

மேற்காண் வினாவுக்கு விடையளியுங்கள். வினாவின் பாவகை என்னவோ அதே பாவகையில்தான் விடையும் அமைந்திருக்க வேண்டும்!

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3/25/11

3

இங்க கொஞ்சம் எட்டிப் பாத்துட்டுப் போங்க!

|
எத்தனையோ பேரிடத்தில் ஏட்டிலும் நாவிலும் என எழுத்திலும் ஒலியிலும் சிக்கிச் சின்னாபின்னமான தமிழ் , தனது தூய வடிவத்துடன் இன்று எங்காவது இருக்கிறதாஎனத் தேடிப்பார்த்துச்சலிப்புற்ற தருணத்தில், தற்செயலாக ஓரிடத்தில் கண்டேன். சந்திப் பிழைகளும், வாக்கியப் பிழைகளும் பொங்கிப் பெருகி வழிந்தோடும் நாளிதழகள் மற்றும் பருவ இதழகள்,247 எழுத்துகளை 123 எனப் பாதியாகக் குறைத்து ஒரேமதிரி ஒலித்து ஒலிக்கொலை புரியும் தொகுப்பாளப் பெருமக்கள் , பதினைந்து ஆங்கிலச் சொற்களுக்கு ஒரு தமிழ்ச்சொல் என்ற விகிதத்தில் உரையாடும் தமிழ்த் திரைப்படக் காட்சிகள், தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் அரைகிறுக்குகள், என் மகளுக்குச் சரியாகத் தமிழில் பேச வராது எனப் புளகாங்கிதம் அடையும் தமிழ்ப்பெற்றோர்கள் , தமிழகத்தின் சந்து பொந்துகள், இண்டு இடுக்குகள், மூலை முடுக்குகள், மேடுபள்ளங்கள், காடுகுன்றுகள், கடல் வயலகள், எங்கெங்கு தேடியும் காணாத தூய தமிழைத் தொலைக்காட்சிகளின் மொழிமாற்று நிகழ்ச்சிகளில் கண்டேன்.

"நாம சேஃப்டியா இருக்கோமாங்கிறத கன்ஃபர்ம் பண்ணிட்டுத்தான் நெக்ஸ்ட் மூவ் என்னண்ணு திங்க் பண்ணனும்"
இந்த உரையாடல் சாதாரணமாகத் தமிழ்த் திரைப்படமொன்றிலோ, தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிலோ இடம் பெற்க்கூடிய நவீனத் தமிழில் எழுதப்பட்டதாகும்.ஆனால் இதே உரையாடல் மொழிமாற்றுத் திரைப்படத்திலோ, வேறேதேனும் மொழிமாற்று நிகழ்ச்சியிலோ அமையும்போது எப்படி இருக்கும் என்று பார்ப்போம். 
"நாம பாதுகாப்பா இருக்கோமாங்கிறத உறுதிப்படுத்திட்டுத்தான் அடுத்த வேலை என்னன்னு யோசிக்கணும் "
முழுமையான தமிழ்த்திரைப்படம் அல்லது தமிழ் நிகழ்ச்சி எனப்படுமொன்றில் இரண்டறக் கலந்து நிற்கும் ஆங்கிலம், ஆங்கில நிகழ்ச்சியொன்றின் மொழிமாற்று வடிவத்தில் அடியோடு மறைந்து விடுகிறது என்பது இதில் முரண்நகை
மேலும் சில உதாரணங்கள்:
" I FEEL TIRED....                  "- இது தமிழ்!
"நான் ரொம்பக் களைப்பா இருக்கேன்" - இது மொழிமாற்று நிகழ்ச்சி!
"ப்ளீஸ்........ ஸ்லோவாப் போங்க,என்னால பேலன்ஸ் பண்ண முடியல...."- இது  தமிழ் நிகழ்ச்சி.
"தயவு செஞ்சு மெதுவாப் போங்க, எனக்கு ரொம்பத் தடுமாறுது"- இது மொழிமாற்று.
"ஷ்யூர்,ஐ வில் ட்ரை மை லெவல் பெஸ்ட்...., பட் , நீங்க கொஞ்சம் வெய்ட் பண்ணனும்"- இது தமிழ் நிகழ்ச்சி!
"உறுதியா, நான் முடிந்த அளவு முயற்சி செய்வேன், ஆனா நீங்க கொஞ்சம் காத்திருக்கணும்"- இது மொழிமாற்று!
"பிலீவ் மீ ... ப்ளீஸ்...... ஐ டின்ட் டூ திஸ்..."- இது தமிழ் நிகழ்ச்சி!
"தயவு செஞ்சு என்னை நம்புங்க, நான் இதைச்செய்யல..."- இது மொழிமாற்று நிகழ்ச்சி!

வாழ்க ஆங்கில நிகழ்ச்சிகள்! வளர்க அவற்றின் மொழிமாற்று வடிவங்கள்!!
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3/24/11

2

தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி

|

'ரசனை' ஆகஸ்ட் 2010 இதழில் திரு.உ.தங்கவேல் சரவணன் அவர்கள் எழுதிய "தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி" படித்தேன். இன்பம் ஊற்றெடுக்கும் இனிய பாடல் அது.பலமுறை படித்து மகிழ்ந்தும் தீரவில்லை. என்னை வெகுவாகக் கவர்ந்த நான்கு அடிகளை இங்கு தருகிறேன்.


"நன்னிலை தீர்ந்திங்கு நலிவினை ஏற்றோம்
         நாலுபேர் எங்களை ஏசிடக் கேட்டோம்
அன்னையுன் ஆளுமை பின்னடைந் ததுவோ
        ஆண்டசெங் கோலதும் தாழ்ந்துபோ நதுவோ
புன்னகைப் பூமுகம் முன்வந்து காட்டாய்
       புதுஎழுச் சிக்கொரு தெம்பினை ஊட்டாய்
இன்னமும் எங்களைக் காக்கவைக் காதே
      இருந்தமி ழே!பள்ளி எழுந்தரு ளாயே!ஓசையின்பமும் பொருளின்பமும் ஒருங்கே அமைந்து உள்ளுதொறும்  உள்ளுதொறும்
உவகையளிக்கும் ஒப்பற்ற பாடலது. இன்னமும் என் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ரசனை  இதழில் மரபுக்கு என்றுமே தனியிடம் உண்டு!

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3/19/11

2

வயிற்றின் கொடுமை

|

பெண்பாற்புலவர்களில் பெரும்புகழ் பெற்றவர் ஔவையார். எளிமையான கருத்துகளின் மூலம் வலிமையான கருத்துகளைப் பதித்தவர்.. ஔவையார் என்ற பெயரில் புலவர் பலர் இருந்திருக்கின்றனர் என்பது பலரும் அறியாத ஒன்று."அறம் செய விரும்பு" என்னும் ஔவையாரின் ஆத்திசூடியிலிருந்துதான் பலரது கல்வியும் துவங்கியது;துவங்குகிறது. அறநெறிக்கருத்துகளை அவ்வளவு அழகாகப் பாடியிருப்பார் ஔவையார். நல்வழி என்னும் அவரது தொகுப்பில் இடம் பெற்ற அவரது
"சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
பாழின னுடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கு நாம்"

 என்ற பாடலில்தான் வயிற்றின் கொடுமையை அவர் எவ்வளவு ஆணித்தரமாக நிறுவுகிறார்.என்ற பாடலில்தான் வயிற்றின் தேவையை அவர் எவ்வளவு ஆணித்தரமாக நிறுவுகிறார். ஒரு சாண் வயிற்றின் தேவையை நிறைவேற்ற மனிதன் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது எனப் பட்டியலிடுகிறார். கூழைக்கும்பிடு போடுவதிலிருந்து கடவுளுக்குக் கும்பிடு போடுவது வரை சேவிப்பதும்  வணங்குவதும் எல்லாமே அதற்காகத்தான்!
"என்ன கருப்பசாமிப் பிள்ளைவாள் " கதை நினைவுக்கு வருகிறதா?
கருப்பன் என்றொரு பண்ணையாள் கூலிக்காக ஒரு பண்ணையாரிடத்தில் வேலை செய்து வந்தான். அவனுக்கென்று யாருமே இல்லாததால் பண்னையிலேயே கிடந்து எல்லாவகையான சேவகத்தையும் செய்து வந்தான். பண்ணையார் தரும் கூழையோ கஞ்சியையோ குடித்து வயிறு வளர்த்து வந்தான்.
ஒருநாள் மடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற இடத்தில் பொற்காசுகள் இருந்த புதையல் ஒன்றைக் கண்டான். அதனைப் பார்த்ததுமே அவனுக்கு என்ன செய்வதென்று தலைகால் புரியவில்லை.அதனை அப்படியே புதைத்து வைத்துவிட்டு பெரும் மகிழ்ச்சியோடு பண்ணைக்குத் திரும்பினான். பண்ணையாரிடம் அதைபற்றி மூச்சுக் காட்டவில்லை. நாள்தோறும் மேய்ச்சலுக்குப் போகும்போது அதனை எடுத்துப் பார்ப்பான்.மகிழ்ந்து போவான். தான் செல்வந்தனாகிவிட்டதாக எண்ணிக் கொள்வான். ஒருநாள் பண்ணையார் அவனுக்குக் கஞ்சி ஊற்றுவதற்காக "கருப்பா... டேய் கருப்பா...." என்று சத்தமிட்டார்.கருப்பனுக்குக் கோபம் வந்து விட்டது.பண்ணையாரிடம் "கருப்பசாமி" என்று கூப்பிடக் கூடாதா என்று கோபித்துக் கொண்டான். பண்ணையார் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்.கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து கும்பிடு போடும் இவனுக்கு என்ன வந்தது இன்று எனப் புரியாமல் விழித்துவிட்டு , சரி போனால் போகிறதுகருப்பசாமி என்று கூப்பிட்டால்தான் என்ன குறைந்து விடப் போகிறது, இவனை விட்டால் மூன்று நேரக் கஞ்சிக்கும் கூழுக்கும் இவ்வளவு வேலை செய்ய யார் கிடைப்பார் என முடிவு செய்து, "கஞ்சியைப் பிடி கருப்பசாமி" என்றார்.மறுநாள் அதேபோலக் கருப்பசாமி எனக் கூப்பிட்டபோது "கருப்பசாமிப் பிள்ளை" என்று கூப்பிடக் கூடாதாஎனக் கடிந்து கொண்டான். பண்ணையாரும் ஒத்துழைத்தார்.ஓரிரண்டு நாட்கள் கழிந்ததும் பண்ணையார் கருப்பசாமிப் பிள்ளை என்று சத்தமிட்டபோது , பொன்வெறி தலைக்கேறியிருந்த கருப்பன்"கருப்பசாமிப் பிள்ளைவாள்" என்று கூப்பிடுங்கள் என்று முரண்டு பிடித்தான்.
பண்ணையாருக்கு அதிர்ச்சி தாங்கமுடியாமல் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது, அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்தார். மறுநாள் கருப்பன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிச் சென்ற போது பின் தொடர்ந்து போய்  மர்மத்தைக் கண்டறிந்தார். கருப்பன் பொற்காசுப் புதையலை எடுத்துப் பார்ப்பதையும் மந்தகாசமாகச் சிரிப்பதையும் மீண்டும் புதைத்து வைப்பதையும் பார்த்துவிட்டு அவன் போனவுடன் அதனை எடுத்துச் சென்று விடார். மறுநாள் விஷயம் புரியாமல் புதையலை எடுத்துப் பார்த்த கருப்பன் வெலவெலத்துப் போனான். செய்வதறியாமல் திகைத்து நாலாப் புறங்களிலும் தேடிச் சோர்வுற்று பண்ணைக்குத் திரும்பினான்.அவன் உள்ளே நுழைவதைப் பார்த்த  பண்ணையார் கம்பீரமாக "என்ன கருப்பசாமிப் பிள்ளைவாள் !" என்று முழங்கினார். கருப்பன் "பிள்ளைவாளும் இல்லை , ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.நான் உங்கள் பழைய கருப்பனே கருப்பன் தான்" என்று புலம்பியவாறு உள்ளே நுழைந்தானாம் கருப்பன்.

சேவிப்பது என ஔவையார் கூறுவதைப் பொருத்திப் பாருங்கள்!
மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவமுயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியற்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போவதால்தான் இரந்து நிற்றலின் இழிவு பொறுத்துமிரந்து நிற்கின்றனர் பலர். "வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்" என்றதும் தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் உலகத்தை அழிக்கச் சொன்னதும் இதனால்தான்.
இன்னும் கோயம்புத்தூரில் அன்னலட்சுமி என்ற ஓட்டலில் கட்டண நிர்ணயமின்றி "வேண்டிய அளவு உண்ணுங்கள், விரும்பியதைக் கொடுங்கள்" என்று உணவு வழங்கி வருவதைப் பார்க்கலாம். நான் கண்ட அளவு ஒருவேளை உணவையாவது வயிறார உண்போம் என அங்கு வருவோர் எத்தனையோ பேர். பெற்றோர், உற்றார், உறவினர். சுற்றத்தார், நண்பர், பிறந்த மண், குழந்தைகள் என அனைவரையும் விட்டு விட்டுத் திரைகடல் தாண்டிச் சென்று திரவியம் தேடுவோரின் ஆதாரத் தேவையும் அதுதான். நாஞ்சில் நாடனின் எஸ்.கே.முத்து கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறது. மொழி தெரியாவிடத்தில் உறக்கம் தொலைத்தும், உடைமை இழந்தும் சில நேரங்களில் உணர்வை இழந்தும் சகித்துக் கொண்டு செங்கல் சுமப்பதிலிருந்து கார் கழுவுவது வரை எல்லாமே தெண்ணீர்க் கடல் கடப்பதில் அடங்கும்.

இடத்துக்குத் தகுந்த வேடங்களை இட்டுப் பாவிப்பவர்க்கும், அரசர்க்கும்,பாட்டிசைக்கும் புலவர்க்கும் கூட அதே தேவைதான். மன்னனிடம் பரிசில் பெற்றுச் சென்று அடுப்பை மூட்டிய கதைகளையெல்லாம் நாம் படித்திருக்கிறோம் இப்படி எல்லாச் செயல்களுக்காகவும்தான் நமது பாழாய்ப்போன உடம்பை அலைக்கழித்து நாழியுணவைப் பெறுகிறோம் என்கிறார் ஔவையார். 
இன்னமும் இந்தியாவில் எத்தனையோ கோடிப்பேர் ஒருவேளை உணவு இல்லாமல்தான் இரவு உறங்கப் போகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.சாலையில் தேங்கிய பாலைக் குழந்தைக்காக அள்ளும் அவலத்தைப் பதிவு செய்திருக்கிறார் நாஞ்சில் நாடன்.
பாழின் உடம்பைப் பலவிதமாகப் போவித்தும் பசியாறிடில் சகத்தினை என்செய்வது ?
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3/17/11

4

பல்-பள்ளம்-பழம்

|


உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் சிறப்புகளுள் 'ழ' கரமும் ஒன்று.அது மட்டுமல்லாமல் ண,ற, ள என்னும் எழுத்துகளும் தமிழின் தனிச் சிறப்புகளாம். பொதுவாக ழ, ல மற்றும் ள என்னும் மூன்று எழுத்துகளும் இன்று தமிழ் கூறும் நல்லுலகத்தின் நாவுகளில் ஒரே எழுத்தாகிவிட்டன.இனத்திலும், சாதியிலும், மததிலும்,நிறத்திலும், பணத்திலும் வேற்றுமைகளை மிகத்தீவிரமாகக் கடைபிடிப்பவன் உச்சரிப்பில் மட்டும் ஒற்றுமையைப் பேணுகிறான்.இனத்தில் வேறுபாடு இருந்தால் போதாதா, எழுத்தில் வேறு வேண்டுமா என நினைக்கிறானோ என்னவோ?
வெள்ளம் என்று சொல்வதைக் கேட்டு எழுதும் போது எந்த 'ல' என்று கேட்கிறான்.


தமிழில் ஒரே 'ள' தான் இருக்கிறது என்று அழுத்தந்திருத்தமாக ஒலித்துக்காட்டினாலும் 'ள' என்று ஒலி வேறுபாடுறக் கூறப்படுவதை அவனால் விளங்கிகொள்ள முடியவில்லை.ல, ள மற்றும் ழ இடையிலான  ஒலி வேறுபாடு அவனுக்குப் புரியமாட்டேனென்கிறது.
எளிமையான ஒரு பயிற்சியை இங்கு கற்றுத்தருகிறேன். ல,ள,ழ ஆகிய மூன்று எழுத்துகளையும் அவற்றின் ஒலிப்பையும் எளிதில் நினைவு வைத்துக் கொள்ள இது உதவும்.
'ல்' என்னும் எழுத்துக்குப் 'பல்' என்னும் சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும் . 'ல்' என்று சொல்லும் போது நுனி நாக்கு மேல்வரிசை முன்பல்லின் பின்புறம் படவேண்டும்.(சொல்லிப் பார்க்கவும்)


'ள்' என்னும் எழுத்துக்குப் 'பள்ளம்' என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். 'ள்' என்று சொல்லும் போது நுனிநாக்கானது மேல்வரிசை முன்பற்களின் உள்புற ஈறுகளுக்கு மேற்பகுதியில் அமைந்துள்ள பள்ளம் போன்ற பகுதியில் பட வேண்டும் . (சொல்லிப் பார்க்கவும்)
'ழ்' என்னும் எழுத்த்க்குப் பழம் என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். வாழைப் பழத்தை விழுங்குவது போல உள்ளிழுத்து மடக்கவும்.
பல்-பள்ளம்-பழம்..... இது ஓர் எளிமையான பயிற்சி! இப்பயிற்சிகளை ஒரு பயிலரங்கில் கற்றுக் கொடுக்கும்போது, மூன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவியொருத்தி (சங்கீதா என்று நினைவு) கேட்டாள்:
"பல் என்று சொல்லும்போது நாக்கு பல்லில் பட வேண்டும் என்கிறீர்கள்! அப்படியானால் 'கல்' என்று சொல்லும்போது நாக்கு கல்லில் படவேண்டுமா?"
நம் குழந்தைகளின் புத்திகூர்மையும் நகைச்சுவையும் presece of mind எனப்படும் சமயோஜிதமும் வியக்க வைக்கின்றன.
இது போன்ற பல சொற்களையும், தொடர்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்க்கவும்.உதாரணத்திற்குச் சில:*கல்,நில்,மலை,கலை,கள்,வெள்ளை,மக்கள், விழை, வாழ்க்கை,ஆழி
*வாழைப்பழத்தோல் வழுக்கி ஏழைக்கிழவன் கீழே விழுந்தான்
*அவன் நல்லவன் அல்லன்
*கல்லிலிருந்து எடுத்தான்
*சொல்லொன்று சொல்லேன்
*தள்ளும் உள்ளம்
*தள்ளாடித் தள்ளாடிச் சென்றான்
*பள்ளத்தில் உள்ள முள்ளெடு
*கீழே விழுந்து அழுதான்
*கொழுகொழுத்த வாழை
மேற்காண் தொடர்களெல்லாம் ஒரேவகையான எழுத்தை ஒலித்துப் பழக உதவும். இதற்கு நாநெகிழ் பயிற்சி என்று பெயர். வேறுபட்ட ஒலிகளையுடைய எழுத்துகள் கலந்து வரும் சொற்களையும், தொடர்களையும் ஒலித்துப் பழகுவதர்கு நாபிறழ் பயிற்சி என்று பெயர்.
உதாரணங்கள்:
*தொழிலாளி
*மேல் ஏழு ஓலை, கீழ் ஏழு ஓலை
*வில்லேருழவர் பகை கொளினும் கொள்ளற்கச்
சொல்லே ருழவர் பகை
*பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது
மேற்காண் தொடர்களெல்லாம் ஒரேவகையான எழுத்தை ஒலித்துப் பழக உதவும். இதற்கு நாநெகிழ் பயிற்சி என்று பெயர். வேறுபட்ட ஒலிகளையுடைய எழுத்துகள் கலந்து வரும் சொற்களையும், தொடர்களையும் ஒலித்துப் பழகுவதர்கு நாபிறழ் பயிற்சி என்று பெயர்.
உதாரணங்கள்:
*தொழிலாளி
*மேல் ஏழு ஓலை, கீழ் ஏழு ஓலை
*வில்லேருழவர் பகை கொளினும் கொள்ளற்கச்
சொல்லே ருழவர் பகை
*பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது
நெற்றிக்குப் பொட்டிட்டு, விழிகளில் மையிட்டு, முகத்தில் நறுமணத்தைலமும் பொடியும் பூசி, இமைகளில், உதட்டில், கன்னங்களில், கூந்தலில்,நகங்களில் வன்ணமிட்டு, கழுத்து, காது, மணிக்கட்டில் பொன், வெள்ளி, ப்ளாஸ்டிக், ப்ளாட்டினம், ரப்பர் அணிகள் பூட்டி, நகங்களை சீராக்கி, தலைமுடி நறுக்கி, கண்கவர் ஆடைகளையும் , கண்கண்ணாடிகளையும் குளிர்சாதன விற்பனையகங்களில் ஐந்துமணிநேரம் பொறுக்கிக் கழித்து எடுத்துத் தள்ளி, சோர்ந்து தேர்ந்து வாங்கி அணிந்து.........அழகுண்ர்ச்சியும் ரசனையும் மிகுந்தவர்கள்தாம் நாம்!ஆனால் வாயிலிருந்து வெளிப்படும் மொழியும் அதே போல அழகுடன் இருப்பதன் சுகத்தையும், சுவையையும் உண்ர்ந்தால்தான் நமது அழகுணர்ச்சியும் ரசனையும் முழுமை பெறும்.இத்தனை அலங்காரங்கள் செய்து கொண்டு, வாயைத் திறக்கும் போது , 'கலீஜாக' ல, ள, ழ மூன்றையும் ஒன்று குழப்பி அடிப்பது AWKWARD -இலும் BACKWARD ஆகத் தெரிகிறது எனக்கு.நாவு எனக்குத் திரும்ப மாட்டெனென்கிறது என்பதில் என்ன கருமாந்திர பந்தா இருக்கிறதோ தெரியவில்லை.
"எனக்கு கடுமையான உள்மூலம் இருக்குங்க"
"எனக்கு நாலு நாளா சரியா டூபாத்ரூம் வர மாட்டேங்குதுங்க"
"வேகமா நடந்தா முட்டி வலிக்குதுங்க"
என்று சொல்லும்போது நம்மிடத்தில் தோன்றாத பந்தா "தமிழ்" பேசும் போது எனக்கு நாக்கு புரள மாட்டேங்குது" என்று சொல்லும்போது எங்கிருந்துதான் வந்து சேர்கிறது?

அதானால்தான் :"யாகாவாராயினும் நாகாக்க "என்றானோ தெரியவில்லை!
"பள்ளியில் பேசினால் ஃபைனென்றும் செய்தித்தாள்
அள்ளினால் சந்திப் பிழைகளும்-கொல்லுமச்
சேனல் யுவதிகளால் செத்தும் செம்மொழி
ஆனது இன்பத் தமில்"
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3/16/11

7

சார்.... ஒரு நிமிஷம்!

|


கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூரைச் சேர்ந்த எனது நண்பர் திரு.கமாலுதீன் அவர்களுடன்  ஒருமுறை உணவருந்திக்கொண்டிருக்கும்போது "உணவருந்தி முடித்தபின் இலையில் ஒரு பருக்கைச் சோறு மீதம் இருந்தாலும் அது தஞ்சைப் பகுதியில் அவமரியாதையாகக் கருதப்படும்" என்றொரு கருத்தைத் தெரிவித்தார்.
உண்மைதான், உண்டபின் தட்டிலோ இலையிலோ மீதம் வைப்பது எத்தனையோ பேரின் உழைப்பை வீணடிப்பது மட்டுமின்றி "உணவு என்பது இரவில் எங்களுக்குக் கனவு" என்று எத்தனையோகோடி மக்கள் ஒருவேளை உணவே இல்லாமல் உறங்கச் செல்லும் அவலத்தை எண்ணிப்பார்க்கையில் அது ஒரு அறங்கெட்ட செயல் என்றும் தோன்றுகிறது.


ஜென் கதை என்று நினைக்கிறேன், எப்போத்தோ படித்தது, தட்டில் இருக்கும் உணவில் இருந்து ஒரே ஒரு அரிசியை எடுத்துப் பார்த்து, விதைப்பிலிருந்து எத்தனை இடங்களைக் கடந்து நம்முமன் உணவுத்தட்டில் வந்து அமர்ந்திருக்கிறது எனச் சீடனுக்குக் குரு உபதேசிப்பதாக அக்கதை செல்லும்.
சாப்பிடுவது என்பது ஒரு கலை.எனது பள்ளித்தோழி ஒருவர் உணவருந்தும்போது கவனித்திருக்கிறேன் , அவர் உணவருந்திய இலையில் மிகச்சிறிய அளவில் உப்பும், சில மிளகாய்த்தோல்களுமே கிடக்கும். அன்றிலிருந்து எனக்கும் அதுபோல் சாப்பிட ப் பேராவல் ஏற்பட்டு, அவ்வாரு உணவருந்தும் முறைக்கு அவரிடைய பெயரையே சூட்டி ( பிருந்தா ஸ்டைல்), எனது நண்பர்கள் குழுவில் அது பிரபலமும் ஆகிவிட்டது.


பரிமாறுகிறவரின் இதயத்தில் இருக்கும் ஈரமும் அன்பும் அவரது கைவிரலகளில் வெளிப்பட்டு அந்த உணவுக்குக் கூடுதல் சுவை கிடைக்கிறது எனப் படித்திருக்கிறேன். அதனால்தானோ என்னவோ அம்மாவின் கைப்பக்குவத்தை மிஞ்சி நமது நாவைக் கவர்ந்திழுக்கும் உணவு வகைகள் இல்லை என நினைக்கிறேன். மனையாளின் கைப்பக்குவத்தை அறியும் பேறு எனக்கு இன்னும் வாய்க்கவில்லை.
காஃபி டேயில் கதைத்துக் கொண்டே கருங்காட்டைக் (அதாங்க.... BLACK FOREST) கால் மணிக்கொரு கடிகடித்து (அடேங்கப்பா! எத்த்னை 'க') இருநூற்றைம்பது ரூபாய் என விலைக்குறியிட்ட ஐஸ்க்ரீமை இரண்டு மூன்று நிமிடங்களுள் உருகும் முன் அவுக் அவுக் என விழுங்கி, டிவி பார்த்து, ஏசி யில் ஜில்லிட்டு இன்பமாய்க் கிளம்பும்போதும்,
உள் அலங்காரத்தில் ஓவிய வேலைப்பாடுகளும் ஒளிவிளக்குகளும் ஜொலிஜொலிக்க,சீருடை அணிந்த சிப்பந்திகளின் அன்பான, கனிவான  உபசரிப்புடன் ஓட்டல் சோஃபாக்களில் அமர்ந்து நான்கு வகைச் சட்னி , எண்ணெயில் கலக்கிய பொடியுடன் , சாம்பாரில் ஆனியன் ரவாவைக் கிழித்து நனைத்து ஊறவைத்து உள்ளே தள்ளும்போதும், தலைக்கறி, குடல்கறி,ஈரல்கறி,லெக்பீஸ்,65,651/2,66,661/2 , சில்லி, மஞ்சூரியன், கோலா உருண்டை,எறா, சுறா வகையறாக்களை மூக்கு விடைக்கச் சுர்ரென்று உறிஞ்சும் போதும், நாண், பட்டர் நாண், தந்தூரி,ரொமாலி,ஃபுல்கா,பரொட்ட,சப்பாத்தி என ரொட்டிகளை மசாலாவில் புரட்டி மெல்லும்போதும், பிஸ்ஸா,பர்கர்,பாஸ்தா அல்லது சேவ்,பேல்,பானி,மசாலா பூரிகள், பாவ்பாஜி கொறிக்கும் போதும், அரேபியன், மெக்ஸிகன் முழுக்கோழிகளைக் கத்தியால் கீறிப் பிளக்கும்போதும்
நான் "பிருநதா ஸ்டைலில்" சாப்பிட்டு முடித்த நிகழ்வுகள் மிகச்சிலவே!
ஆனால் மாட்டுப் பொங்கலன்று , மங்கிய நிலவொளியொழுகும் முன்னிரவில், சாணமிட்டு மெழுகிய மண்தரையில் சம்மணமிட்டு அமர்ந்து, விறகடுப்பில் ஆக்கிய சோற்றை நீர் தெளித்த வாழை இலையில் இட்டு, பூண்டு சேர்த்த கெட்டிக் கொள்ளுப் பருப்பை தேங்காய் எண்ணெய் விட்டுப் பிசைந்து, அரசாணிக்காய்க் கூட்டையும், தேங்காய்த்துருவல் சேர்த்த அவரைக்காய்ப் பொரியலையும் அவ்வப்போது தொட்டுக் கொண்டு, அடுத்துவரும் ஆட்டி வைத்த குழம்பையும், ரசத்தையும் வழித்து உறிஞ்சி, சோற்றுடன் குழைத்துப் பிசையும் போது விரலிடுக்கில் வெண்ணெய் திரளும் சுத்தப் பசுந்தயிரும் உண்டு, தண்ணீர் ஒரு மிடறு விழுங்கி இலையை மூடி வைத்ததை இப்பொது யோசித்துப் பார்த்தால்தான் அதில் நான் ஒரு பருக்கையையும் விட்டு வைத்திருக்கவில்லை என்பது நினைவுக்கு வருகிறது!
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3/12/11

கவிதைச் சவால்

|


வண்டமிழ் மொழியதன் இலக்கணந் துலக்க
நன்னூ லென்னும் செந்நூல் செப்பிக்
கற்கும் யாரும் ஐயம் தீரச்
செய்தவர் பெயரைச் சொல்லு வீரே!


கவிதை மூலமாக விடை அளிக்க அடுத்த கேள்வியைக் கொண்டு வந்துள்ளேன், கேள்வி அமைந்துள்ள பாவகையிலேயே பதிலையும் தாருங்கள்!
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3/11/11

7

சூலூர்-பெயர்க்காரணம்

|
கோயம்புத்தூர்  மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படும் முன்பு எங்கள் வசிப்பிடம் பல்லடம் தாலுகாவில் இருந்தது. தற்போது பல்லடம் தாலுகா கோயம்புத்தூரிலிருந்து பிரிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துக்குள் வருவதால், பல்லடம் தாலுகாவிலிருந்த சூலூர், சுல்தான்பேட்டை ஒன்றியங்கள் மட்டும் கோயம்புத்தூர் மாவட்டத்திலேயே சூலூரைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய தாலூகாவில் அமைகின்றன.எனவே எங்களது புதிய தாலுகாத் தலைநகரமான சூலூரைப் பற்றி ஒரு சுவையான தகவலைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
கோயம்புத்தூர் மாநகரின் நீட்சியான சூலூர் நகரம், தேசிய நெடுஞ்சாலை எண் 67 இல் அமைந்துள்ளது.நொய்யலாற்றங்கரையிலமைந்துள்ள இந்நகரில் எந்நேரமும் குளிர்நத காற்று வீசிக்கொண்டிருக்கும் அழகான படகுத்துறை உண்டு.கரையை ஒட்டி முன்பு சூரல் எனப்படும் பிரம்பு அடர்ந்து வளர்ந்திருந்ததால்தான் சூரலூர் என்றிருந்து காலப்போக்கில் மருவி சூலூர் என்றானது எனப் படித்திருக்கிறேன்!
கேரள மாநிலத்தையும், கோயம்புத்தூரையும் இந்தியாவின் பிறபகுதிகளுடன் இணைக்கும் பெரும்பாலான ரெயில் வண்டிகளும் சூலூரைத்தான் கடந்து செல்கின்றன.இவ்வூரில் விமானப் படைத்தளமும் அமைந்துள்ளது. எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் சுற்றிலும் அமைந்துள்ள சூலூர் நகரானது பலதரப்பு மக்களும் வசிக்கும் இடமாகும்!
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3/10/11

2

"காதல்" ங்கிறது.....

|
காதலைத்தான் நமது திரைப்படங்கள் எப்படியெல்லாம் கதறக் கதறக் கழுத்தைத் திருகியுள்ளன  என்பது நாமனைவரும் அறிந்ததே, நிற்க!"காதல்ங்கிறது என்று ஆரம்பிக்கும் வியாக்கியான வசனங்களும், "காதல் ஒண்ணும்" என்று ஆரம்பிக்கும் வக்காலத்து வசனங்களும் கேட்டுக் கேட்டுக் காதும் காற்றும் புளித்துப் போயிருந்தாலும், காதலை நமது திரைப்பட உற்பத்தியாளர்களும், திரைப்படம் பார்த்து இன்பம் துய்ப்பவர்களும் அவ்வளவு எளிதில் விட்டுவிடத் தயாராக இல்லை.எனவே புதிது புதிதாகச் சில வசனங்களை இங்கே தந்திருக்கிறேன். யார் வேண்டுமானாலும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.


ஒரே பொருளை இரு பொருளில் அதாவது ஒரே வஸ்துவை இரண்டு அர்த்தங்களில் தந்துள்ளேன், எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்!பெரும்பாலும் க்ளைமாக்ஸில் நாயகன் நாயகியிடம் சொல்ல ஏற்றவை!
டூத்ப்ரஷ்:-
காதல்ங்கிறது ஒரு டூத் ப்ரஷ் மாதிரிங்க, எந்நேரமும் உங்களைப் புத்துணர்ச்சியோடு வச்சிருக்குங்க!
(அல்லது)
காதல் ஒண்ணும் டூத் ப்ரஷ் கிடையாதுங்க, நீங்க காலையில எடுத்து யூஸ் பண்ணிட்டு பாத்ரூமில கடாசிட்டுப் போக, அது உங்க செருப்பு மாதிரிங்க, பஸ்ல போனாலும் பாத்ரூம் போனாலும் கூடவே வரும்!


பஸ் டிக்கெட்:-
காதல் ஒண்ணும் பஸ்டிக்கெட்  இல்லீங்க, ஒரு தடவ யூஸ்பண்ணிட்டுத் தூக்கி எறிய, அது பஸ் மாதிரி, டிக்கெட்டே இல்லேன்னாலும் ஸ்டெப்ஸிலேயே தொங்கலாம், ஒரு டிக்கெட் பிடிக்கலேன்னா இன்னொரு டிக்கெட் கரெக்ட் பண்ணலாம்!
(அல்லது)
காதல் ஒரு பஸ் டிக்கெட் மாதிரிங்க, உங்க கிட்ட பஸ் இல்லேன்னா யாரும் ஃபைன் போட மாட்டாங்க, ஆனா டிக்கெட் இல்லேன்னா செக்கர் ஃபைன் போட்டுடுவாருங்க!


சாம்பார் வாளி:
காதல் ஒண்ணும் சாம்பார் வாளி இல்லீங்க, யார் வேணும்னாலும் தூக்கி ஊத்துறதுக்கு!அது பாயசம் மாதிரி, வாழ்க்கைக்கு ருசி கூட்டறதே அதுதான்!
(அல்லது)
காதல் ஒரு சாம்ம்பார் வாளி மாதிரிங்க, என்னதான் நீங்க இருபது இட்லி வெச்சாலும் ஒரு பயலும் திங்க மாட்டான், ஒரு கரண்டி சாம்பார் ஊத்தினாத்தான் இலையிலேயே கை வைப்பான்!
பன்னிக்குட்டி:
காதல் ஒண்ணும் பன்னிக்குட்டி இல்லீங்க ,கருப்பா சேத்துல புரண்டுகிட்டே இருக்கறதுக்கு, அது ஒரு கழுதை மாதிரிங்க, உதைக்காம விடாது!
(அல்லது)
காதல் ஒரு பன்னிக்குட்டி மாதிரிங்க, நீங்க அத உங்க கூட வச்சிக்கிட்டா இந்த உலகமே உங்களப் பைத்தியம் மாதிரிப் பாக்கும்!
ஜன்னல் கம்பி:
காதல் ஒண்ணும் ஜன்னல் கம்பி இல்லீங்க, நீங்க கேப்புல பான்பராக் துப்புறதுக்கு, அது ஒரு வீடு மாதிரிங்க, நீங்க படுத்து உருளலாம், பாத்திரம் தேய்க்கலாம், என்ன வேணும்னாலும் செய்யலாம்!
(அல்லது)
காதல் ஒரு ஜன்னல் கம்பி மாதிரிங்க, கம்பி இல்லாம ஜன்னல் இல்ல .... காதல் இல்லாம சாவு இல்ல சாரி... வாழ்க்கை இல்ல!
ஏர்போர்ட்:
காதல் ஒண்ணும் ஏர்போர்ட் இல்லீங்க, ஒரு ஃப்ளைட் போனா அடுத்ததப் பிடிக்க, அது பாராசூட் மாதிரி, உங்களக் காப்பாத்த கூடவே வரும்!
(அல்லது)
காதல் ஒரு ஏர்போர்ட் மாதிரிங்க, எத்த்னை ஃப்ளைட் வந்தாலும் உங்க ஃப்ளைட்ல மாடும்தான் ந்நீங்க ஏறமுடியும்.
HELMET:
காதல் ஒண்ணும் HELMET இல்லீங்க பைக்ல போகும்போது மட்டும் கூட வர்றதுக்கு, அது ஒரு நரிவால் மாதிரி, நரி எங்க போனாலும் கூடவே அதோட வாலும் போற மாதிரி நீங்க எங்க போனாலும் அதும் உங்க கூடவே வரும்!
(அல்லது)
காதல் ஒரு HELMET மாதிரிங்க, உங்களக் காப்பாத்தறதுக்கு தானே அடிவாங்கி நெளிஞ்சாலும் அடுத்த தடவ உங்களப் பாத்ததுமே பல்லிளிக்கும்!
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3/9/11

5

அல்ல-அன்று-அல்லர்-அல்லன் -அல்லள்

|

"பந்தைப் பிடித்தது அவன் அல்ல"
"நேற்று வந்தவர் இவர் அல்ல"
"அது அவனுடைய நூல் அல்ல"
மேற்கண்ட தொடர்களுள் சரியானவை எவை? எவையுமே அல்ல!
"அல்ல" என்னும் சொல்லானது அஃறிணைப் பன்மைச் சொற்களுக்குமட்டுமே உரியதாகும்.
"மேற்கண்ட நான்கு தொடர்களுமே சரியானவை அல்ல"
இங்கு "தொடர்கள்" என்ற அஃறிணைப் பன்மை வரும்போது "அல்ல" என்பதைப் பயன்படுத்தலாம். ஆனால் "அவன்" என்று வரும்போது "அல்லன்" என்றும் "அவர்" என்று வரும்போது "அல்லர்" என்றும் "அவள்" என்று வரும்போது "அல்லள்" என்றும் அது என்று வரும்போது "அன்று" என்றுமே  வரவேண்டும்.

முதல் தொடரைப் பார்ப்போம்.
"பந்தைப் பிடித்தது அவன் அல்ல"
பந்தைப் பிடித்தவன் ஆண்பாலாதலால் "பந்தைப் பிடித்தவன்" என்றும் "அல்லன்" என்றும் வந்து "பந்தைப் பிடித்தவன் அவன் அல்லன் " என்று வருவதே சரியான தொடராகும்..
"நேற்று வந்தவர் இவர் அல்லர்" என்று இரண்டாவது தொடர் அமைய வேண்டும்.
"அது அவனுடைய நூல் அல்ல"- இது மூன்றாவது சொற்றொடர்.நூல் என்பது ஒருமையாதலால் "அன்று" என வர வேண்டும். மேலும்"அது" என்னும் சுட்டு அடுத்து வரும் சொல் மெய்யில் தொடங்கினால் மட்டுமே வரும்.

உயிரில் தொடங்கும் போது :அஃது" என்று வந்து "அஃது அவனுடைய நூல் அன்று" என அமையும்.இப்பொழுது மேலும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
"அவன் சிறந்த வீரன் அல்ல/ன்"
"அவள் ஆடத் தெரியாதவள் அல்ல/ள்"
"நேரு கயமையைப் பொறுத்துக் கொள்பவர் அல்ல/ர்"
"அஃது ஓர் அழகிய சிற்றூர்"
மேற்கண்டவற்றுள் இறுதித் தொடரைக் காண்போம்.
கிராமம் என்பது தமிழ்ச்சொல் அன்று.சிற்றூர் என்பது தூய தமிழ்ச்சொல்.
'அழகிய' என்று உயிரில் தொடங்கும் சொல்லின் முன் "ஒரு" வராது."ஓர்"வந்தது.

""ஓர்" என்பதும் உயிரில் தொடங்குவதால் "அது" என்பது "அஃது" என்று வந்தது. 
"விளிந்தாரின் வேறல்லர்" என்னும் குறளை (எண்143) நோக்குக! "வேறல்ல" என்னாமல் "வேறல்லர்" என்றே வள்ளுவர் குறிப்பிடுகிறார்.(விளிதல்-இறத்தல்).
எனவே "அன்" விகுதி ஆண்பாலுக்கும், "அள்" பெண்பாலுக்கும்,"அர்" பலர்பாலுக்கும், "று" ஒன்றன்பாலுக்கும், "அ" பலவின்பாலுக்கும் வருதல் வேண்டும்.
 வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ்!!

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto