3/19/11

வயிற்றின் கொடுமை

|

பெண்பாற்புலவர்களில் பெரும்புகழ் பெற்றவர் ஔவையார். எளிமையான கருத்துகளின் மூலம் வலிமையான கருத்துகளைப் பதித்தவர்.. ஔவையார் என்ற பெயரில் புலவர் பலர் இருந்திருக்கின்றனர் என்பது பலரும் அறியாத ஒன்று."அறம் செய விரும்பு" என்னும் ஔவையாரின் ஆத்திசூடியிலிருந்துதான் பலரது கல்வியும் துவங்கியது;துவங்குகிறது. அறநெறிக்கருத்துகளை அவ்வளவு அழகாகப் பாடியிருப்பார் ஔவையார். நல்வழி என்னும் அவரது தொகுப்பில் இடம் பெற்ற அவரது
"சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
பாழின னுடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கு நாம்"

 என்ற பாடலில்தான் வயிற்றின் கொடுமையை அவர் எவ்வளவு ஆணித்தரமாக நிறுவுகிறார்.என்ற பாடலில்தான் வயிற்றின் தேவையை அவர் எவ்வளவு ஆணித்தரமாக நிறுவுகிறார். ஒரு சாண் வயிற்றின் தேவையை நிறைவேற்ற மனிதன் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது எனப் பட்டியலிடுகிறார். கூழைக்கும்பிடு போடுவதிலிருந்து கடவுளுக்குக் கும்பிடு போடுவது வரை சேவிப்பதும்  வணங்குவதும் எல்லாமே அதற்காகத்தான்!
"என்ன கருப்பசாமிப் பிள்ளைவாள் " கதை நினைவுக்கு வருகிறதா?
கருப்பன் என்றொரு பண்ணையாள் கூலிக்காக ஒரு பண்ணையாரிடத்தில் வேலை செய்து வந்தான். அவனுக்கென்று யாருமே இல்லாததால் பண்னையிலேயே கிடந்து எல்லாவகையான சேவகத்தையும் செய்து வந்தான். பண்ணையார் தரும் கூழையோ கஞ்சியையோ குடித்து வயிறு வளர்த்து வந்தான்.
ஒருநாள் மடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற இடத்தில் பொற்காசுகள் இருந்த புதையல் ஒன்றைக் கண்டான். அதனைப் பார்த்ததுமே அவனுக்கு என்ன செய்வதென்று தலைகால் புரியவில்லை.அதனை அப்படியே புதைத்து வைத்துவிட்டு பெரும் மகிழ்ச்சியோடு பண்ணைக்குத் திரும்பினான். பண்ணையாரிடம் அதைபற்றி மூச்சுக் காட்டவில்லை. நாள்தோறும் மேய்ச்சலுக்குப் போகும்போது அதனை எடுத்துப் பார்ப்பான்.மகிழ்ந்து போவான். தான் செல்வந்தனாகிவிட்டதாக எண்ணிக் கொள்வான். ஒருநாள் பண்ணையார் அவனுக்குக் கஞ்சி ஊற்றுவதற்காக "கருப்பா... டேய் கருப்பா...." என்று சத்தமிட்டார்.கருப்பனுக்குக் கோபம் வந்து விட்டது.பண்ணையாரிடம் "கருப்பசாமி" என்று கூப்பிடக் கூடாதா என்று கோபித்துக் கொண்டான். பண்ணையார் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்.கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து கும்பிடு போடும் இவனுக்கு என்ன வந்தது இன்று எனப் புரியாமல் விழித்துவிட்டு , சரி போனால் போகிறதுகருப்பசாமி என்று கூப்பிட்டால்தான் என்ன குறைந்து விடப் போகிறது, இவனை விட்டால் மூன்று நேரக் கஞ்சிக்கும் கூழுக்கும் இவ்வளவு வேலை செய்ய யார் கிடைப்பார் என முடிவு செய்து, "கஞ்சியைப் பிடி கருப்பசாமி" என்றார்.மறுநாள் அதேபோலக் கருப்பசாமி எனக் கூப்பிட்டபோது "கருப்பசாமிப் பிள்ளை" என்று கூப்பிடக் கூடாதாஎனக் கடிந்து கொண்டான். பண்ணையாரும் ஒத்துழைத்தார்.ஓரிரண்டு நாட்கள் கழிந்ததும் பண்ணையார் கருப்பசாமிப் பிள்ளை என்று சத்தமிட்டபோது , பொன்வெறி தலைக்கேறியிருந்த கருப்பன்"கருப்பசாமிப் பிள்ளைவாள்" என்று கூப்பிடுங்கள் என்று முரண்டு பிடித்தான்.
பண்ணையாருக்கு அதிர்ச்சி தாங்கமுடியாமல் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது, அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்தார். மறுநாள் கருப்பன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிச் சென்ற போது பின் தொடர்ந்து போய்  மர்மத்தைக் கண்டறிந்தார். கருப்பன் பொற்காசுப் புதையலை எடுத்துப் பார்ப்பதையும் மந்தகாசமாகச் சிரிப்பதையும் மீண்டும் புதைத்து வைப்பதையும் பார்த்துவிட்டு அவன் போனவுடன் அதனை எடுத்துச் சென்று விடார். மறுநாள் விஷயம் புரியாமல் புதையலை எடுத்துப் பார்த்த கருப்பன் வெலவெலத்துப் போனான். செய்வதறியாமல் திகைத்து நாலாப் புறங்களிலும் தேடிச் சோர்வுற்று பண்ணைக்குத் திரும்பினான்.அவன் உள்ளே நுழைவதைப் பார்த்த  பண்ணையார் கம்பீரமாக "என்ன கருப்பசாமிப் பிள்ளைவாள் !" என்று முழங்கினார். கருப்பன் "பிள்ளைவாளும் இல்லை , ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.நான் உங்கள் பழைய கருப்பனே கருப்பன் தான்" என்று புலம்பியவாறு உள்ளே நுழைந்தானாம் கருப்பன்.

சேவிப்பது என ஔவையார் கூறுவதைப் பொருத்திப் பாருங்கள்!
மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவமுயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியற்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போவதால்தான் இரந்து நிற்றலின் இழிவு பொறுத்துமிரந்து நிற்கின்றனர் பலர். "வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்" என்றதும் தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் உலகத்தை அழிக்கச் சொன்னதும் இதனால்தான்.
இன்னும் கோயம்புத்தூரில் அன்னலட்சுமி என்ற ஓட்டலில் கட்டண நிர்ணயமின்றி "வேண்டிய அளவு உண்ணுங்கள், விரும்பியதைக் கொடுங்கள்" என்று உணவு வழங்கி வருவதைப் பார்க்கலாம். நான் கண்ட அளவு ஒருவேளை உணவையாவது வயிறார உண்போம் என அங்கு வருவோர் எத்தனையோ பேர். பெற்றோர், உற்றார், உறவினர். சுற்றத்தார், நண்பர், பிறந்த மண், குழந்தைகள் என அனைவரையும் விட்டு விட்டுத் திரைகடல் தாண்டிச் சென்று திரவியம் தேடுவோரின் ஆதாரத் தேவையும் அதுதான். நாஞ்சில் நாடனின் எஸ்.கே.முத்து கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறது. மொழி தெரியாவிடத்தில் உறக்கம் தொலைத்தும், உடைமை இழந்தும் சில நேரங்களில் உணர்வை இழந்தும் சகித்துக் கொண்டு செங்கல் சுமப்பதிலிருந்து கார் கழுவுவது வரை எல்லாமே தெண்ணீர்க் கடல் கடப்பதில் அடங்கும்.

இடத்துக்குத் தகுந்த வேடங்களை இட்டுப் பாவிப்பவர்க்கும், அரசர்க்கும்,பாட்டிசைக்கும் புலவர்க்கும் கூட அதே தேவைதான். மன்னனிடம் பரிசில் பெற்றுச் சென்று அடுப்பை மூட்டிய கதைகளையெல்லாம் நாம் படித்திருக்கிறோம் இப்படி எல்லாச் செயல்களுக்காகவும்தான் நமது பாழாய்ப்போன உடம்பை அலைக்கழித்து நாழியுணவைப் பெறுகிறோம் என்கிறார் ஔவையார். 
இன்னமும் இந்தியாவில் எத்தனையோ கோடிப்பேர் ஒருவேளை உணவு இல்லாமல்தான் இரவு உறங்கப் போகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.சாலையில் தேங்கிய பாலைக் குழந்தைக்காக அள்ளும் அவலத்தைப் பதிவு செய்திருக்கிறார் நாஞ்சில் நாடன்.
பாழின் உடம்பைப் பலவிதமாகப் போவித்தும் பசியாறிடில் சகத்தினை என்செய்வது ?
வாக்களிப்புப் பட்டைகள்

2 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto