4/5/11

தமிழ் உங்களை எங்கு குத்துகிறது?

|

அனாடமியிலோ, ஜியாகிரபியிலோ அல்ல, பேசுவதில், எழுதுவதில்,படிப்பதில்,கேட்பதில் தமிழ் உங்களை எங்கு இடர் செய்கிறது? ஐயாயிரம் ஆண்டுகளாகப் பல்லாயிரங்கோடி மக்களின் நாவிலும், செவியிலும், எழுதுகோல்களிலும், சுவடிகளிலும் சரளமாகப் புழங்கிவந்த மொழி, இன்று கைவரப் பெறவில்லையெனில், அதன்மீது குறையிருக்கும் என்றெனக்குத் தோன்றவில்லை.
இரண்டு நிகழ்வுகள் அண்மையில் வெகுவாக என்னைப் பாதித்தன. இவ்வாண்டின் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுதேர்வுகளில் முதல் தேர்வான தமிழ் முதல்தாளை எழுதி முடித்து விட்டு வந்த எனது எனது அண்டை வீட்டாரின் மகளிப் பற்றி அவரிடம் கேட்டேன் , எப்படித் தேர்வு எழுதியிருக்கிறாளென்று..அதற்கு அவர் சொன்னார்:தமிழ் அவளுக்கு எப்பவுமே டஃபுங்க(tough), நெறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவா, படிக்கிறதே எழுத்துக் கூட்டித்தான் படிப்பா, ஃப்ரென்ச் கிடைக்காததால்தான் தமிழ் சூஸ் (  choose   ) பண்ணினா..... நாளைக்கும் அவளுக்குக் கஷ்டந்தான்!(தமிழ் இரண்டாம் தாள்)அது முடிஞ்சதுனா மத்த எல்லாப் பேப்பரும் நல்லா எழுதிடுவா"எனது நண்பர் ஒருவர் நல்ல பாடகர். ஆனாலவர் பாடல்களைப் பாடும்போதும் பதிவுசெய்யும் போதும், பயிற்சி எடுக்கும் போதும் தமிழ்ப்பாடலை ஆங்கில வரிவடிவத்தில் எழுதி வைத்துக் கொண்டுதான் பாடுவார்.வாசிக்கத் தமிழ் ரொம்பக் கஷ்டமாம்! இப்பொழுது புரிகிறதா "காத்தல் பிஸ்ஸாஸே ஏத்தோ சவ்க்கியம் பருவாயில்லே" மதிரியான அனர்த்தங்கள் எப்படிச் சாத்தியமாகின்றன என்று.
மேற்கண்ட இருவருமே சுத்தத் தமிழர்கள், தமிழ்ப் பண்பாட்டில் உதித்தவர்கள், தமிழர்களைத் தாய், தந்தையராகக் கொண்டவர்கள்தாம். தனது பெண் தாய் மொழியில் திணறுகிறாள் என்று சொல்லும்போது நியாயமாக அவரது குரலில் துயரம்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் ஒருவகையான பெருமிதம்தான் அதில் தொனித்தது.

பரம்பரை பரம்பரையாகத் தமிழுக்குப் பழகிவந்த நாவுகள் இன்று புரள மறுக்கின்றனவா? எனில், அது ஒரு MUTATION!
தமிழ்ல் பேசினால் தரம் குறைந்து விடும், தன்க்குரிய மதிப்பு சமுதாயத்தில் மறைந்து விடும் என நினைத்தால் அது தாழ்வு மனப்பான்மையின் தனித்த அடையாளம். தாழ்வு மனப்பான்மையில் புரண்டு நெளிந்து கொண்டிருப்பவர்கள், ஆயிரம் மொழிகளைக் கற்றுத் தேர்ந்தாலும் வாழ்வில் வெற்றியை எதிர்கொள்வது கடினம் .
மொழிமீது இருக்கும் தீராக் காதலாலோ, அதன் இலக்கிய வளத்தால் ஈர்க்கப் பட்டோஅல்லது பொருளீட்டுவதன் ஏதேனும் ஒரு நடைமுறைச் சாத்தியத்திற்காகவோ. பொழுது போக்கிற்காகவோ ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதென்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான், ஆனால் தாழ்வு மனபான்மைதான் ஒரு மொழியை மறுக்கச் செய்கிறது என்றால் , அது உளவியல் சார்ந்த ஒன்று.
ஆங்கிலம் பேசுபவன் தான் அறிவாளி என்னும் மாயபிம்பம் தோற்றுவிக்கப்பட்டு வெகுநாளாகிறது.மொழி அறிஞர்கள், மொழியியலாளரகள், மொழியில் ஆளுமை மிக்கவர்கள், புலமை மிக்கவர்கள் யாரும் இதனை ஒத்துக்கொள்ளுவார்கள் என்றுதோன்றவில்லை.


"இங்கிலிசில் யாராச்சும் ரெண்டெழுத்துப் பேசினால்
எங்குண்டு ஞானியிவர் போலென்போம்- இங்கிலந்தில்
பிச்சை எடுப்பவனும் பேரறிஞன் நாமவனை
மெச்சியே வாய்பிளப்போம் மெய்."

மொழியறிவு என்பது உறுதியாக ஒரு கூடுதல் தகுதிதான், ஐயமில்லை, ஆனால் தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன தயக்கம் இவர்களுக்கு , அல்லது தமிழ் எனக்குச் சரியாக வராது என்று சொல்லிக் கொள்வதிலென்ன பெருமை என்று எனக்குப் புரிபடுவதே இல்லை .

உமிகொண் டரிசி துறப்பான் -தமிழின்
   உலகப் பெருமை மறப்பான்!
தமிழா உன்றன் தலைவிதி மாற்றத்
   தரணியில் எவனினிப் பிறப்பான்?

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto