6/1/11

'உ'கரத்தின் மீது நமக்கிருக்கும் வெறி!

|
'அ' கரம் முதலான அருந்தமிழ் மொழியில், 'உ'கரம் மூன்றாமெழுத்தாக அமைந்துள்ளது.ஒருமாத்திரை அளவுடைய இந்த 'உ'கரம் தான் நம்மை எப்படியெல்லாம் ஆட்கொண்டுள்ளது எனப் பார்த்தால் பெருவியப்பு மேலிடும்.

'உ' எனும் இவ்வுயிரெழுத்துப் பிறக்குமிடமானது இதழகளாகும். இதழ்கள் குவியும்போது 'உ' பிறக்கிறது. (நன்னூல்)
பொதுவாகக் கைநொடிக்கும் கால அளவையோ அல்லது கண்ணிமைக்கும் கால அளவையோ ஒரு மாத்திரை என்கிறோம். குறிலுக்கு ஒரு மாத்திரை யும் , நெடிலுக்கு இரண்டு மாத்திரை அளவும், மெய்யெழுத்துகளுக்கு அரை மாத்திரை அளவும் ஒலியளவு ஆகும்.ஆனால், ஒரு சில இடங்களில், 'உ'கரமானது தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவினதாய் ஒலிக்கும். அதனை நாம் குற்றியலுகரம் என்று , கூறுகிறோம்.

வல்லுகரங்களான கு,சு,டு,து,பு,று ஆகிய ஆறும் வல்லின மெய்யைத் தொடர்ந்து வருவதுசொல்லின் இறுதியில் வன்றொடர்க் குற்றியலுகரம் ஆகும். 
சான்று:
நாக்கு
மூச்சு
பாட்டு
கூத்து
காப்பு
கூற்று.
மெல்லின மெய்யைத் தொடர்ந்து இவ்வாறு உகரங்களும் வருவது மென்றொடர்க் குற்றியலுகரமாகும்.
சான்ரு:
பங்கு
பஞ்சு
வண்டு
பந்து
அம்பு
கன்று.

இடையின மெய்யைத் தொடர்ந்து சொல்லின் இறுதியில் இவ்வாறனுள் ஏதேனும் ஒன்று வருவது இடைத்தொடர்க் குற்றியலுகரமாகும்.
சான்று:
பல்கு
ஆய்சு
மார்பு
கொய்து.
சொல்லின் இறுதியில் இவ்வாறும் அமைந்து, அவற்றுக்கு முன் நெடில் இருந்தால் , அது நெடிற்றொடர்க் குற்றியலுகரமாகும்.
சான்று:
பாகு
காசு
நாடு
பாபு (கதவு)
ஆறு.

ஆய்த எழுத்தைத் தொடர்ந்து சொல்லின் இறுதியில் இவை வந்தால் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரமாகும்.
சான்று:
எஃகு
கஃசு
அஃது
இஃது.
சொல்லின் இறுதியில் இவ்வாறனுள் ஏதேனும் ஒன்று அமைந்திருந்து, அதற்கு முன் உயிர்மெய்யாக இருந்தால் , உயிர்த்தொடர்க் குற்ரியலுகரமாகும்.
சான்று:
மதகு
அரசு
பகடு
பழுது
மரபு
வயிறு.
அதே போலத் தனி எழுத்தாக உள்ள எல்லா உகரங்களுமே முற்றியலுகரமாகும்.
தனிக்குறிலை அடுத்து வரும் உகரம்,(நகு,பசு,படு,அது,தபு,மறு,கரு,புழு,கணு போன்றவை)
தனி எழுத்தாக வரும் உகரம்,(உ, கு,சு,து,ணு,டு,பு,று,ளுஆகியவை)
இருகுறிலை அடுத்துவந்த , கு,சு,டு,து,பு,று அல்லாத பிற உகரங்கள்,(கதவு,அரவு,அலமு,விழவு,உழவு போன்றவை)

ஆனால் நமது பேச்சு வழக்கில் மெய்யில் முடியும் சொற்களைப் பெரும்பாலும் உகரம் சேர்த்தே முடிக்கிறோம்.
சான்று:
பல்-பல்லு
நெல்-நெல்லு
வயல்-வயலு
கள்-கள்ளு
மண்-மண்ணு
தேள்-தேளு
தேன் -தேனு
தேர் - தேரு
நான் - நானு
மீன் - மீனு
பேன் - பேனு
யாழ் - யாழு
வால் - வாலு
பகல் - பகலு
திடல் - திடலு
பார் - பாரு
வேர் - வேரு 
செய்யுள் - செய்யுளு
பட்டியல் மிக நீளமானது. இதைக் கூடச் சகிப்பே, ஆனால். ஆங்கிலத்தின் நிலைதான் பரிதாபகரமானது.
CAKE-கேக் - கேக்கு
LAND -லேன்ட் - லேன்டு
AND - அன்ட் - அன்டு
ROAST-ரோஸ்ட் - ரோஸ்ட்டு
SONGH - சாங் - சாங்கு
GROUND -க்ரௌன்ட் - க்ரௌன்டு
PRINT- ப்ரின்ட் - ப்ரின்ட்டு
PANIT-பெயின்ட் - பெயின்ட்டு
POINT-பாயின்ட் - பாயின்ட்டு
போன்றவை .
இதைக்கூடச் சகிப்பேன். ப்ரின்ட் ப்ரிவ்யூ(PRINT PREVIEW) என்பதை, கூட்டுச் சதி, பாட்டுப் பெட்டி, பூட்டுக்காரன் பாட்டுக்காரன் என்பது போல ப்ரின்ட்டுப் பிரிவியூ என்று சொல்வதுதான் குருதி அழுத்தத்தைக் கூட்டுகிறது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாம் ஆங்கிலம் பேசுவதைக் கேட்டால் , நாம் ஆங்கிலம்தான் பேசுகிறோம் என்று சத்தியம் செய்தால் தான் நம்புவார்கள்.தமிழில் பேச வேண்டிய இடங்களில் அல்லது பேசக்கூடிய இடங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் பேசுவது அல்லது ஆங்கிலம் கலந்து பேசுவது என்பது தமிழுக்குச் செய்கிற துரோகம். அவ்வாறுபேசுகிற ஆங்கிலத்தையும் தமிழைப் போலப் பேசுவது ஆங்கிலத்துக்குச் செய்கிற துரோகம்.
ஒருமொழி கொன்றும் ஓய்ந்திடாமல், பிறமொழியும் கொன்றால்தான் பிறவிப்பயன் தீருமோ எனத் தோன்றுகிறது.

வாக்களிப்புப் பட்டைகள்

7 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

முனைவர்.இரா.குணசீலன் said... 1/6/11 2:08 AM

.தமிழில் பேச வேண்டிய இடங்களில் அல்லது பேசக்கூடிய இடங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் பேசுவது அல்லது ஆங்கிலம் கலந்து பேசுவது என்பது தமிழுக்குச் செய்கிற துரோகம். அவ்வாறுபேசுகிற ஆங்கிலத்தையும் தமிழைப் போலப் பேசுவது ஆங்கிலத்துக்குச் செய்கிற துரோகம்.
ஒருமொழி கொன்றும் ஓய்ந்திடாமல், பிறமொழியும் கொன்றால்தான் பிறவிப்பயன் தீருமோ எனத் தோன்றுகிறது.

மிக அழகாகச் சொன்னீங்க நண்பா.

முனைவர்.இரா.குணசீலன் said... 1/6/11 2:09 AM

இலக்கணத்தை வாழ்வியலுடன் சொன்னமை பாராட்டுக்குரியது.

Anonymous said... 1/6/11 4:19 AM

correct boss

அகிலம் தங்கதுரை said... 2/6/11 4:35 PM

i felt at a special tamil grammer class

Anonymous said... 3/6/11 11:36 AM

கரெக்ட்'டு'.... சாரி...கரெக்ட்!

கோவி.கண்ணன் said... 15/11/11 5:50 PM

//அவ்வாறுபேசுகிற ஆங்கிலத்தையும் தமிழைப் போலப் பேசுவது ஆங்கிலத்துக்குச் செய்கிற துரோகம்.
உங்கள் கருத்து சரிதான், ஆனால் மொழி அரசியல் என்று ஒன்று உண்டு, தூத்துக்குடி, திருவநந்தபுரம் என்று எழுத ஆங்கிலத்தில் எழுத்துகள் இல்லையா ? பிறகு ஏன் அவர்கள் டுட்டுக்கொரின், திருவான்ட்ரம் என்று எழுதி வந்தனர், வாயில் நுழைந்து வெளி வரும் அளவுக்குத்தான் பிற மொழிச் சொற்களை எந்த ஒரு மொழி பேசுபவரும் சொல்வதற்கு முடியும், பிற மொழிகளை முறையாகப் படித்தவர்கள் வேண்டுமானால் சொல் ஒலிப்புக்கேற்பப் பேசுவர், என்னதான் சிவாஜி, எம்ஜிஆர் பெயர் பெற்றிருந்தாலும் சிவாசி, எம்சிஆர் என்றே அழைக்கப் பெற்றனர், தமிழில் ஜ உள்ளிட்ட வடமொழி ஒலிப்பு எழுத்துகள் இல்லை என்பதாலும் தேவையற்றது என்பதாலும் அவற்றைச் சொல்லிப் பழகி இருக்கவில்லை. தமிழர்கள் மட்டுமல்ல கன்னடர்கள், தெலுங்கர்கள் கூட அப்படித்தான் பிற மொழிகளைப் பேசுவார்கள், தமிழை தெமிளு என்பார்கள் கன்னடர்கள், பஸ்ஸு, காரு, ரயிலு என்று உகரம் சேர்த்துச் சொல்வது திராவிட மொழி பேசுபவர்களின் வழக்கம், நீஙகளெல்லாம் சீனர்கள், மலாய்காரர்கள் ஆங்கிலச் சொற்களை பேசும் முறைகள் பார்த்தது இல்லையே :)

ஆங்கிலமே கிரேக்க, லத்தீன, பிரெஞ்சு மொழிகளின் திரிப்புக் கலவை தானே. ஆங்கிலம் கூட பலமொழிகளுக்கு துரோகம் செய்து தான் வடிவம் கொண்டுள்ளது.
:)

KALAIMAHEL HIDAYA Risvi said... 20/2/15 2:17 AM

இலக்கணத்தை புரிந்து எழுதுவதற்கு அருமையாக வழி காட்டியுள்ளீர்கள் பாராட்டுக்கள் என் தேவைக்கு பயன் தரும் விளக்கம் நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto