6/14/11

பொன்னின் பொருண்மை

|

மண்ணுக்கு அடியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் வெறும் உலோகந்தான் அது.
ஆனாலும் தங்கம் இல்லாமல் மனித வாழ்க்கையைக் கற்பனை செய்ய இயலாது.மூவாசைகளுள் ஒன்றாகப் பொன்னைக் குறிப்பிடக் காரணம், அதன் வசீகரமான, ஒளிரும் அழகுத் தன்மையா,அல்லது கிடைத்தற்கரிய பொருளாக இருப்பதா தெரியவில்லை.அழகும் வசீகரமும்தான் காரணம் என்றால், பொன்னை விட அழகும் வசீகரமும் உள்ள எத்தனையோ பொருட்கள் உள்ளன. அதே போலக் கிடைத்தற்கரிய பொருட்களும் எத்தனையோ உள்ளன.சில நேரங்களில், திடீரெனத் தங்கத்தின் இருப்பு மிக அதிக அளவில் எங்கேனும் கண்டறியப்பட்டோ அலல்து நீரைப்போல நிலத்தடியில் பரவலாகக் கண்டறியப் பட்டாலோ தங்கத்தின் மீது நமக்கிருக்கும் ஈர்ப்பு என்ன ஆகும் , தஙகத்தின் ம‌திப்பு என்ன ஆகும்,தங்கத்தை வாங்கிக் குவித்து வைத்திருக்கும் மக்களின் நிலை என்ன ஆகும் என்று சிந்திப்பதுண்டு!

நேற்று எனது தோழி ஒருத்தி சிலப்பல சவரன்களை, தங்க அணிகலன்கள் விற்பனை செய்யப்படும் கோயம்புத்தூரின் புகழ்பெற்ற கடையொன்றில் வாங்கி வந்து அதைப்பற்றிய தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொள்கையில், தங்கத்தில் முதலிடுவது எனபதுபுத்திசாலித்தனமான ஒன்று என்றும், அஃது ஒரு மிகச்ச்றந்த சேமிப்பு முறை என்றும்,அஃது ஒரு சொத்தும் கூட எனறும்,குடும்ப விழாக்களில் நமது ஸ்டேட்டஸ் ஸிம்பல் என்றும் தெள்ளத் தெளிவாகப் புரிந்த எனக்குள் சில வினாக்கள் எழுந்தன.
பெண்குழந்தைகள் வைத்திருப்பவர்கள் தங்கத்தைச் சேமிப்பதையும்,நகைச் சீட்டுப் போடுவதையும் பார்த்திருக்கிறேன்.பெண்களூக்குக் கல்வியறிவும்,தன்னம்பிக்கையும் ஊட்டுவதில் காட்டும் ஆர்வத்தை விட,அவர்களுக்காகத் தங்கத்தைச் சேமிப்பதில் பெற்றோர்கள் காட்டும் ஆர்வம் அதிகம் என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு,கல்லூரிக் கல்விக்கு நிறைய‌ச் செலவாகும் என்று, அந்தப் பணத்துக்கு நகை வான்கி வைத்து விட்டுத் திருமணத்துக்கு மாப்பிள்ளை தேடத் தொடங்குபவர்களையும் பார்த்திருக்கிறேன்.
 எனது சொந்த அனுபவமே கூட உண்டு,.எனது சகோதரிக்குக் கல்லூரிச் செலவுக்குச் சில லட்சங்கள் தேவைப்பட்ட போது, அதனைத் தயார் செய்து வைத்திருந்த நிலையில்,சிலர் ஆலோசனை சொன்னார்கள். இந்தத் தொகைக்கு இவ்வளவு சவரன் தங்கம் வாங்கலாம் ,திருமணச் செலவுக்கு இவ்வளவு வைத்துக் கொல்ளலாம் என்கிற ரீதியில் அந்த ஆலோசனைகள் இருந்தன.

ஆனால் எனக்கு அப்படித் தோன்றாததால், கல்லூரியில் சேர்த்தோம். இன்று மாதாமாதம் அவர் இரண்டு சவரன் மதிப்பிலான ஊதியம் வாங்கிக்கொண்டிருப்பதோடு, கற்றுத் தேர்ந்ததன் மதிப்பையும் , தன்னம்பிக்கையையும் கொண்டிருக்கிறார்.
 தோழி சொன்னது போலத் தங்க‌த்தில் முதலிடுவது எதிர்கால நனமைக்கு வழிவகுக்கும். தஙத்தை அடகுவைத்துக் கடன் வாங்குவது,சில ஆண்டுகளிலேயே விற்று லாபம் பார்ப்பது,அவசரத்துக்கு விறபது, உள்ளிட்ட பயன்கள் தங்கத்தால் கிடைப்பவை.
முன்பே சொன்னது போல, அஃது ஒரு சொத்து, சேமிப்பு,கௌரவம் எல்லாமும் கூட.இந்த மிகச் சிறிய உலோகத்தால் தான் உலகப் பொருளாதாரமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எளிய பொருளியல் கொள்கையின் மூலாதாரமாகத் தங்கம் அமைந்திருக்கிறது.மாதாமாதம் அரசின் முதியோர் ஓய்வூதியம் வாங்குபவர் முதல் ஐ,நா.சபை வரை தங்கமே பொருளாதாரத்தின் அடிப்படைக் காரணியாகத் திகழகிறது.இவை எல்லாமே வியப்பை ஏற்படுத்தினாலும், தங்கத்தின் பொருண்மைப் பயன் என்ன எனச் சிந்தித்தேன். குறைந்த பட்சம் இரண்டு தாள்களை இணைக்கும் குண்டூசியாகக் கூட அதன் பயன் இருக்கவில்லை. இன்று 'பேப்பர் கோல்டு' போன்ற முறைகள் வந்துவிட்ட நிலையில், ஒரு பருப்பொருளாகத் தங்கம் ஜீரோ நிலையில்தான் பயன்படுகிறது.

பொன்னின் பயன் அதன் மதிப்பில்தான் இருக்கிறதே தவிர, அதன் பொருண்மை‍ப் பயன் ஏதுமில்லை.
தங்கம் இல்லாத உலகைக் கற்பனை செய்து விடலாம். ஆனால் இரும்பு இல்லாத உலகைக் கற்பனை செய்து விட முடியாது.இந்தப் பருப்பொருள் பயன்பாட்டு வாதத்தைச் சிலர் ஏற்பது இல்லை.தங்கம் தேவை இல்லை என்று சொல்வதன்று, இந்த 'நகை'முரணை ரசிக்கச் செய்வதே இவ்விடுகையின் நோக்கம்.
ஆனால் பொன்னை ரசிப்பதை விட, அண்மையில் கேரளாவின் கொழிஞ்சாம்பாறையிலிருந்து வடக்கிபாளையம் வழியாகக் கோயம்புத்தூரை அடுத்த கிணத்துக்கடவு வந்த ஒரு பொன்மாலைப் பொழுதில், அந்தி சாயும் நேரத்தில்,பைக்கை ஓரமாக நிறுத்திப் பார்த்த, கதிரவனின் தகதக மஞ்சள் நிறக்கதிர்கள் சாலையின் இருபக்கங்களிலும் விளைந்து படர்ந்த பசும்பயிர்களின் மீதுபட்டுத் தெறித்து, ஜாஜ்வல்யமாக மின்னிய அந்தத் தாவரத் தங்கத்தை என்னால் மற‌க்கவே முடியவில்லை. எனக்கு வாழ்க்கையின் அழகையும், இயற்கையின் இனிமையையும், பொழுதுகளின் நறுமையையும் உணர்த்தும் வல்லமை பொன்னுக்குக் கிடையாது போங்கோள்!
வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 14/6/11 4:58 AM

அண்மையில் கேரளாவின் கொழிஞ்சாம்பாறையிலிருந்து வடக்கிபாளையம் வழியாகக் கோயம்புத்தூரை அடுத்த கிணத்துக்கடவு வந்த ஒரு பொன்மாலைப் பொழுதில், அந்தி சாயும் நேரத்தில்,பைக்கை ஓரமாக நிறுத்திப் பார்த்த, கதிரவனின் தகதக மஞ்சள் நிறக்கதிர்கள் சாலையின் இருபக்கங்களிலும் விளைந்து படர்ந்த பசும்பயிர்களின் மீதுபட்டுத் தெறித்து, ஜாஜ்வல்யமாக மின்னிய அந்தத் தாவரத் தங்கத்தை என்னால் மற‌க்கவே முடியவில்லை// அருமையான வர்ணனை மற்றும் சொல்லாடல்..

தொடுவானம் said... 14/6/11 6:13 AM

பெண்ணை வெறுத்தாலும் வெறுப்பார்கள், பொன்னை வெறுக்கவே மாட்டார்கள், அதனால்தானோ என்னவோ பொன்னின் விலை நாளுக்கு நாள் கிடுகிடு வென்று ஏறிக்கொண்டிருக்கிறது. அதிலும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே அஃது எளிதில் கிடைக்கிறது.அடித்தட்டு மக்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.அ

அகிலம் தங்கதுரை said... 14/6/11 10:59 AM

மாயை நிறைந்த இப்புவிவாழ்வை நாம் மாய்ந்து மாய்ந்து வாழ்ந்து பார்த்தாலும், கடைசியில் கிடைப்பது பூஜ்யம்தான்.பூஜ்யமான பொன்னை ராஜ்யத்தின் மீது வைத்துக் கொண்டாடும் நம்மவர்களின் மடைமாற்ற அறிவை நினைத்தால் ஆத்திரந்தான் வருகிறது.மனதில் தங்க குணம் இருந்துவிட்டால் உடலில் காட்டிக்கொள்ளத் தேவையில்லை.இதைத்தான் கண்ணதாசன்: பொன்னை விரும்பும் பூமியிலே,என்னை விரும்பும் ஓருயிரே.....

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto