7/29/11

9

நெஞ்சில் நிலைத்த நெல்லைச் சமையல்

|

திருநெல்வேலி என்றதும் அல்வா, தாமிரபரணி,குற்றாலம் முதலியவை நினைவுக்கு வரும்.திருநெல்வேலி மண்ணுக்கே உரிய மற்றொரு அம்சம் அவர்களது சப்புக்கொட்ட வைக்கும் சமையல்தான். அண்மையில் விகடனில், மூங்கில் மூச்சு எழுதிவரும் சுகாஇதுபற்றி மிகச்சுவையாகத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.நான் தமிழ்நாடு முழுக்கச் சுற்றி அலைந்திருக்கிறேன்.எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு சிறப்பு இருப்பது உண்மை . ஆனால் நெல்லைச் சமையல் எனக்குக் கிறக்கத்தை ஏற்படுத்திவிட்டது.என்னுடன் பணிபுரியும் தோழி ஒருவர் நெல்லைக்காரர்.அவர் கொணரும் உணவுவகைகள் நாவில் நீர் ஊறச் செய்பவை.நெல்லை ஸ்பெஷலாக அவர் அவ்வப்பொழுது கொணரும் சில அயிட்டங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

#உளுந்துக்கஞ்சி:
வெள்ளை உளுந்து,தேங்காய்ப்பால், நெய், முட்டை, கருப்பட்டி, ஏலம் , சுக்கு, சேர்த்துச் செய்யப்படும் கஞ்சி. சூடாக ஒரு பெரிய கிண்ணத்தில் ஊற்றிக் குடிக்க, அவ்வளவு இனிமையாக இருக்கும்.சளித்தொல்லைக்குத் தீர்வான இது சத்து மிகுந்ததும் கூட.
# ஒட்டுமாவு:பச்சரிசியைநெய் , ஜீனி, முட்டை தேங்காய்ப்பால் விட்டு நன்கு வறுத்து மணல் போன்ற பக்குவத்தில் டப்பாவில் அடைத்து வைப்பார்கள். மாதக்கணக்கில் தாங்கும். சத்துமிகுந்த ஓட்டு மாவு பசியை அடக்கும். ஒரு சிறிய கரண்டியில் அள்ளி அள்ளி வாயில் போடத் தொண்டையில் சுகமாக இறங்கும்.
#மாசி: கடலுணவான மாசியைப் பொரியலாகச் சாப்பிட்டிருக்கிறேன்.சட்னியாகச் செய்து ஆப்பம், இடியாப்பம்போன்றவற்றுக்கும், துவையலாகச் செய்து பழைய சோற்றுக்கும் சேர்த்து உண்பது அலாதி ருசியாக இருக்கும். முள்ளில்லா மீனைத்தான் உப்பிடாமல் மணலுக்கடியில் பதப்படுத்தி மாசியாக விற்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்.

#தக்கடி: தக்கடி என்பது இஸ்லாமியரின் திருமண விருந்துகளில் இடம்பெறும் உணவுப்பண்டமாகும். தேங்காய் போட்டு வறுத்துப் பச்சரிசி மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கொழுக்கட்டை போலச் செய்து சிக்கன் அல்லது மட்டன் கிரேவியில் வேகவைத்து இட்லி, தோசைக்குப் பதிலாகப் பரிமாறுகிறார்கள்.நறுக் சுருக் கென்று நாவில் நிற்கும் அயிட்டம் இந்தத் தக்கடி.
#வாவல் மீன்:
 முள்ளில்லா வாவல் மீன் குழம்பும், வறுவலும் வாழ்வு முழுதும் மறக்க முடியாதது., நல்ல அகலாமகப் பரந்து விரிந்த வாவல் மீன் ஆவலை அதிகப்படுத்தும் ஒரு பண்டம்.வெறும் கெண்டை, கட்லா வகை, டேம் மீன்களை மட்டுமே இங்கு விற்று வருகிறார்கள்.அவற்ரைத் தவிர்த்து வாவல்,சங்கரா,, செம்மீன், கிளங்கா, விரால், ஊளி, உளுவை, பாறை,வஞ்சிரம், அயிரை போன்ற மீன்வகைகள் சப்புக் கொட்டச் செய்பவை.
விரால் மீன் பாம்பு போல நீண்டு கிடக்கும். பிடித்து வந்து கொல்வதே பெரும்பாடு என்பார்கள்.அவ்வளவு எளிதில் சாகாதாம்.நாஞ்சில்நாடன் சொன்னதைப்போல, நமக்கு ஸீஃபூட்(sea food), அல்லது ஃபிஷ் ஃப்ரை(fish fry)... அவ்வளவுதான் மீனைப் பற்றித் தெரிந்தது. நேரில் அவரைச் சந்தித்தபோது கோயம்புத்தூர் உக்கடம் மீன் மார்க்கெட்டில் அவருக்கு நிகழ்ந்த அனுபவத்தை விவரித்தார்.இவை தவிர நெத்திலி, அயிலை,மத்தி, கெழுத்தி போன்ற சிறு அயிட்டங்களும் உண்டு.

#பானைக்கரம்
 கடையநல்லூர் சென்றிருந்த போது பானைக்கரம் என்று ஒரு பானத்தைக் குடித்தேன். கரைத்த புளியில் கருபாடி கலந்து தொண்டையில் இதமாக இறங்கும் திரவம் அது. தாகம் தீர்க்கும் பானைக்கரத்தினைப் போத்தல்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானக்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். எளிய, சுவை மிகுந்த நீருணவு.
#உளுந்துச்சோறு; பூண்டும், உளுந்தும்,தேங்காய்ப் பூவும் கலந்து செய்யப்பட்ட சுவைமிகுந்த உளுந்துச்சோறு வாயுத்தொல்லைக்கு நல்லது என்றார்கள்.

குடல் குழம்பு:ஆட்டுக் குடலை வறுவலாகத்தான் உண்டிருக்கிறேன்.ஆனால் ஆட்டுக்குடலை வைத்துக் குழம்பு வைத்துக் கொண்டு தந்தார்.சோற்றில் பிசைந்து சாப்பிடச் சுவைமிகுந்து நாவைச் சுண்டியிழுத்தது குடல் குழம்பு.

பிஸா, பர்கர்,பாஸ்தா என நமது கலாசாரம் மாறிவரும் சூழலில் இவைபோன்ற பாரம்பரிய உணவுவகைகள் என்னுள் வியப்பையும், நாவில் நீரையும் உண்டு பண்ணின. நமது மண், காலநிலை,விளைபொருள், வாழ்வுமுறைகளுக்கேற்ற உணவுமுறைதான்நமக்குப் பொருந்திப் போகிறது.

இவை தவிர வேறு என்னென்ன ரெசிப்பிகள் உள்ளன என விசாரித்த போது குழந்தை பெற்ற தாய்மார்களுக்குத் தெம்பூட்டத் தரப்படும் பொட்டுக்கடலைத் துவையலுடனான முட்டைச் சோறு, மற்றும் மருந்து சேர்த்தல் எனப்படும் சாலியல் , சதக்குப்பை, பட்டை, கசகசா சேர்த்த மருந்துச்சோறு மற்றும் புதுமாப்பிள்ளை ஸ்பெஷலான வண்டல் அப்பம் போன்ற அயிட்டங்கள் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.
உண்ணும்போது ஊர்மணக்க, உண்டபின்பு கைமணக்க, நினைக்கும்போது நெஞ்சும் மணக்க, எழுதும்போது இணையமே மணக்கும் நெல்லைச் சமையலே , நீ நீடுவாழி!மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

7/28/11

6

உகரத்தின் மீது நமக்கிருக்கும் வெறி -பாகம் 2

|

உகரத்தின் மீது நமக்கிருக்கும் வெறி  என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு இடுகையைப் பதிவு செய்திருந்தேன் . அதன் தொடர்ச்சி இது.
நேற்றுக் கடைத்தெருவில் நின்றுகொண்டு நண்பர்களுடன் உரையாடிகொண்டிருந்தபோதுஅருகில் எனக்கு அறிமுகமான ஒருவர் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
  ஆல்ரைட்டு, பட்டு ஒன் திங்கு.....என்ற சொற்கள் காதில் பட்டதும் , இஃது என்ன மொழியாக இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்துப் பிறகு ஆங்கிலம் எனத் துணிந்தேன்.  ALL RIGHT, BUT ONE THING......
  என்ற ஆங்கிலச் சொற்களைத்தான் அவர் அவ்வாறு கூறிக் கொண்டிருந்திருக்கிறார்.

நாராசமாக இருந்தது. எதற்கு இந்த வெட்டி பந்தா?எனத்தோன்றியது. சுற்றியிருப்பவர்கள் எல்லாருமே கோமாளிகள் என நினைத்திருப்பார் போலும்!சீன் போட ஆசைப்பட்டிருக்கிறார்.. பாவம் , அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இந்த உரையாடல் வலையேற்றப்படுமென்று.
  ஆங்கிலம் பேசித்ட் தன்னை அறிவாளியாகக் காட்டிக் கொள்ளும் அரைகுறைகளை நினைத்தால் அருவெறுப்பாக இருக்கிறது.

தமிழைத்தான் ஒழுங்காகப் பேசத் தெரியவில்லை, ஆங்கிலத்தையும் ஏன் குற்றுயிரும் குலையுயிருமாக வீசிக் கடாச வேண்டும்?ஆங்கிலத்தை மென்று, தின்று,துப்பி,நக்கி, நாறடிப்பதை நினைத்தால், "அய்யோ பாவம் ஆங்கிலம்!' என்றிருக்கிறது."ஆங்கிலம் இனி மெல்லச் சாகும்"
 என்று யாராவது பாஅடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.ஆங்கிலமோ தமிழோ, ஏன் நம்மில் பலருக்கும் அழகாகக் கையாளத் தெரியவில்லை எனச் சிந்தித்துப் ப்பார்த்தேன்.
 கழுத்தை அழுத்தும் தாழ்வு மனப்பான்மை,
அடுத்தவர் முன் அறிவாளி எனக் காட்டிக் கொள்ளும் அலட்டல்,
சீன் போடுவது,
ஜெர்க் விடுவது,
எவனுக்கு இங்கே என்ன பெரிதாகத் தெரிஒயப் போகிறது என்ற அலட்சியம்,

ஆகியவை இருக்கலாம்.மற்றபடி மொழியின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஆங்கிலத்தைக் கொண்டு அலைகிறார்கள் என்று தோன்றவில்லை!நாஞ்சில் நாடன் சொன்னதை மீண்டும் இங்கு நினைவு கூர்கிறேன்.இந்த அரைகுறை அலப்பறைகளிடம் "நான் ஏன் இந்த நாட்டை நேசிக்கிறேன்?' என்ற தலைப்பில் ஐந்து நிமிடம்பேசவோ , ஒருபாகக் கட்டுரை எழுதவோ சொன்னால்தெரியும். டங்குவார் அந்து டார்டாராகி விடும்.
தமிழில் பேசாவிட்டாலும் பரவாயில்லை, ஆங்கிலத்தை அழித்து விடாதீர்கள், பாவம், அது நமக்கு என்ன தீஙு செய்தது? வேணாம்... வலிக்குது.. அழுதுருவேன்....!மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

7/26/11

4

எந்தனா என்றனா ?தமிழறிவோம்,

|

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
எந்தன் பொன்வண்ணமே....
எந்தன் என்பது என்னுடைய , எனது என்னும் பொருளில் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது.
என்+தன்=என்றன் என்றுதான் வரவேண்டும்.
,அதேபோல, உன்+தன்=உன்றன்.
பன்மையில் வரும் போது, எம்+தம்=எந்தம் என்று வரவேண்டும்.
அவைதான் என்பது அவைதாம் என்றும், அவர்கள்த்கன் என்பது அவர்கள்தாம் என்றும் வருவதுதான் சரியான தமிழ். 


விபத்தில் ஓட்டுநரின் கால் உடைந்தது
ஒட்டுநரின் கால் ரப்பரால் அல்லது மரத்தாலான செயற்கைக்காலாக இருந்து விபத்து நேர்ந்திருந்தால் கால் உடைந்தது என்பது சரி . கால் ஒடிந்தது என்பதுதான் தமிழின் மரபு. 
இயல்பான, எளிமையான, அழகான தமிழைப் பயன்படுத்துவோம்
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

7/25/11

மரபுத் தொடர்கள், பழமொழிகள்,பொன்மொழிகள்.

|
பழமொழிகள் என்பவை நமது வாழ்வின், மொழியின், பண்பாட்டின் குறியீடுகள். வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாகக் கடந்து வருபவை.இயற்கையோடு இணைந்த வாழ்வினைப் பறைசாற்றுபவை.பழமொழிகள் வெளிப்படும் சூழல் பலவகைப்பட்டது.துக்கம். கோபம்,மகிழ்ச்சி,ஐயம் எனப் பல தருணங்களில் பழமொழிகள் வெளிப்படுகின்றன.சூழலின் தீவிரத்தை ஒருவரிப் பழமொழி உணர்த்தி விடும்.நறுக்குத் தெறித்தாற்போல, ஒரு வித நகைச்சுவை உனர்ச்சியுடன், அங்கதச்சுவையுடன் பழமொழிகள் அமைந்திருக்கும்.ஒருவித எள்ளல் தொனி புலப்படும்.
   இன்றைய நாளில் பழமொழிக்கும், பொன்மொழிக்கும், மரபுத்தொடருக்கும் வேறுபாடு அறியாது பலரும் உள்ளனர் என உணர முடிகிறது.பழமொழிகளின் தொகுப்பு என்று வெளியிடப்பட்டுள்ள சிறுநூல்கள் பலவற்றில் எண்ணற்ற பழமொழிகள்  உள்ளன.அவற்றைத் திரட்டித் தந்தமைக்குமவர்களின் கடின உழைப்புக்கும் நாம் கடமைப் பட்டிருக்க வேண்க்டும்.ஆனால் பழமொழிகளுடன், பொன்மொழிகளும்,மரபுத்தொடர்களும் அதில் கலந்துள்ளதைக் காண முடிகிறது.

மாணவர்களிடம் பழமொழிகள் சிலவற்றைக் கூறச் செய்கையில் அவர்கள் பெரும்பாலும் பொன்மொழிகளைக் கூறுகின்றனர்.பொன்மொழியும் , மரபுத்தொடர்களும் பழமொழியினின்றும் வேறுபட்ட்வை.சான்றுகளுடன் பார்ப்போம்.
பசுமரத்தாணி போல- இஃது ஒரு மரபுத்தொடராகும்.இதனைப் பழமொழி என ஏற்க முடியாது.

ஆனால் பழமொழிகளின் பட்டியலில் இதுவும் இடம் பெறுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.உள்ளங்கை நெல்லிக்கனி போல, வாழையடி வாழையாக--- இவையெல்லாமே மரபுத்தொடர்கள்தாம்.
மூடனின் இதயம் அவனது வாயில் உள்ளது.அறிவாளியின் வாய் இதயத்தில் உள்ளது.- இஃது ஒரு பொன்மொழி.இதனையும் பழமொழி என வகைப்படுத்த முடியாது.பழமொழிகளுக்குச் சில சான்றுகள் தருகிறேன்.
'மாங்காய்க்கு ஆசைப்பட்ட மாமியார் மருமகள் பேரைச் சொல்லிக் கேட்டாளாம்"
:நித்திய கண்டம் பூரண ஆயுசு"
பழமொழிகள் வாழ்வனுபவத்தில் தோன்றியவை. நாட்டார் வழக்காக அறியப்படுபவை.வட்டாரப் பழமொழிகளைப் பற்றிக்குறிப்பிடத்தகுந்த ஆழமான ஆய்வுகள் எல்லாம் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

5

தகிக்கும் தவிப்பு!

|

ஏறெடுத்துப் பார்த்தநொடி ஏனிப்படி ஆனதடி
  எதுவுமெனக்கு உலகிலினித் துச்சம் - நீயோ
சேறெடுத்துப் பூசும்படி செய்துவிட்ட கோலமடி
  செந்தணலில் விழுவதுதான் மிச்சம்!


ஆதரவாய் அன்றிருந்த போதகலக் கண்கள்விரித்து
  அழகழகாய்ப் பேசியது இன்னும் - நீஇன்று
வேதனையாம் இருட்குழியில் வெறுத்தொதுக்கித் தள்ளும்போதும்
  வெளிச்சம்போட்டு என்னுயிரில் மின்னும்!கண்டபடி என்னுயிரைக் கலைத்துவிட்டாய் இனியெனது
   கண்ணீரின் ஈரமென்று உலரும்? - இங்கே
மண்டிக்கிடக்கும் இருள்விலகி மகிழ்ச்சிபுரளும் நாளைக்காய்
  மறுபடியும் என்றுபொழுது புலரும்?


வெட்டவெளிப் பொட்டலிலே வெறுமைமட்டும் துணையிருக்க
  வெண்ணிலவின் வருகைபார்த்து நாளும்- சோகம்
கொட்டிவிடக் குமுறித்தீர்க்கக் கட்டிருளில் காத்திருப்பேன்
   கவலையெல்லாம் எப்பொழுது மாளும்?கற்பனைகள் கனவுகளைக் கவிதைகளாய் உருக்கிவிட்டு
   காகிதத்தில் படியும்காதல் வெப்பம்- அவளின்
கற்கள்பதித்த இதயம்தனைக் கசிந்துருகச் செய்யமெல்ல
   காத்திருந்து காத்திருந்து தோற்கும்!


மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

5

உறக்கம் வராதவனின் உளறல்கள் !

|

நள்ளிரவாகியும் உறக்கம் பீடிக்காத கண்களாலும், உருகிக் கொண்டிருக்கும் இதயத்தாலும், விரலிடுக்கில் ஒழுகும் கவிதையை இங்கே ஊற்றி வைக்கிறேன்! படித்துப் பாருங்கள்!!


விடிந்தபின்னும் என்மனதில்
  வெளிச்சம் வரவில்லை- துக்கம்
வடிந்துவிட என்கண்களில்
   வழியும் படவில்லை!


இடிந்துபோன இதயச்சுவர்
   இன்னல் தந்தது - என்னைக்
கடந்துபோன காலமெலாம்
   கருகி வெந்தது!


மடிந்துவிட்ட வழிகள்தேடி
   மனது துடித்தது.- அதில்
படிந்துவிட்ட பாசம்தடுக்கப்
   பரி தவித்தது!

உடைந்துபோன உள்ளத்திலே  
    ஊற்றுத் திறந்தது ‍ -நான்
அடைந்திருந்த கவலைகளை
   அலச மற‌ந்தது

கண்விழியில் கவலைச்சுமை
   காயம் செய்தது - என்
எண்ணமெல்லாம் கதறிப்புலம்ப‌
  எட்டிப் பார்த்தது1
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

7/24/11

9

வலைமொழிகள்!

|

பழமொழிகளை வலைமொழிகளாக மாற்றிப்பார்த்தேன்!      ஐடியா தோன்றியதும் 'டக்' கென நினைவில் வந்த பழமொழிகளை மட்டும் மாற்றியிருக்கிறேன்!


#ஊரார் வலைப்பூவைப் பின்ன் ஊட்டி வளர்த்தால் தனது வலைப்பூ தானே வளரும்!
     (  ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்)


#பதிவரின் மனது இடுகையில் தெரியும் .
                       (அகத்தின் அழகு முகத்தில் தெரியும்)


#புத்தியில் இருந்தால்தானே இடுகையில் வரும்.
                        (சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்)


#வலைப்பதிவருக்கு ட்விட்டர் கற்றுத் தர வேண்டுமா?
                         (மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா?)#கூறு கெட்ட வலைப்பதிவர் ஏழு, எட்டுனு பதிவிட்டாராம்.
                    ( கூறு கெட்ட எருமை மாடு ஏழுகட்டுப் புல் தின்னதாம்!)


#தட்டச்சு செய்வது கால்மணி நேரம்! திரட்டிகளில் பதிவது முக்கால் மணிநேரம்!!
   (சுண்டக்கா காப்பணம், சுமைகூலி முக்காப் பணம்!!!)#கும்பகோணத்தில் பதிவேற்ற குத்தாலத்தில் டைப் செய்தானாம்!
                       (கும்பகோணத்தில் மூட்டை தூக்க  குத்தாலத்தில் முண்டாசு கட்டினானாம்!)


#இட்டதெல்லாம் இடுகையல்ல!
                 ( மின்னுவதெல்லாம் பொன்னல்ல! )


#எழுத மாட்டாதவன் கைகளுக்கு எழுபத்தெட்டு வலைப்பூக்களாம்!
                 ( அறுக்க மாட்டாதவன் கைகளுக்கு அம்பத்தெட்டு அரிவாளாம் ! )#ஈ ன்னு இளிக்க இ‍‍-மெயில் ஐடி இல்லாதவன் ப்ளாக்குக்குப் பேரு பெருச்சாளின்னு வெச்சானாம்!
                           (அடியேன்னு கூப்பிடப் பொண்டாட்டி இல்லாதவன் புள்ள பேரு அருணாச்சலம்னு வெச்சானாம்!)#வம்பளந்து கொண்டே இருப்பவன் வலைப்பதிவு செய்யமாட்டான்!
                                     ( குரைக்கிற நாய் வேட்டைக்கு ஆகாது)


#சீரியல் பாக்குறவனுக்குத் தெரியுமா வலைப்பதிவோட வாசனை !
                                                       (கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை ?_)#ப்ளாக்குக்கு ப்ளாக் ஸ்பெல்லிங் மிஸ்டேக்!
                                 ( வீட்டுக்கு வீடு வாசப்படி !)


# அழுதாலும் பதிவு அவந்தானே இட வேண்டும்!
                                ( அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும் !)


#ஒரு பின்னூட்டம் கொடுத்துக் கருத்துக் கேட்டவன் ஒன்பது பின்னூட்டம் தந்து விளக்கம் சொன்னானாம்.
                                  ( ஒரு ரூபா தந்து அழச்சொன்னவன் ஒன்பது ரூபா தந்து ஓயச் சொன்னானாம் !)#ப்ளாக்கர் கண்ணுக்கு கண்டதெல்லாம் இடுகை!
                                 ( அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!)


#டெம்ப்ளேட் நாறினாலும் போஸ்டிங் நல்லா இருந்தா சரி !
                         (கோழி குருடானாலும் சாறு ருசியா இருக்கணும் &   ஓட்டைச் சட்டியானாலும்  கொழுக்கட்டை வெந்தால் சரி! )#எஸ்.எம்.எஸ். அனுப்பத் தெரியாதவன் ப்ளாக் ஆரம்பிச்சு ப்ரைஸ் வாங்கறேன்னு சொன்னானாம்!
    (கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத‌வன் வானம் ஏறி வைகுண்டம் காட்டப் போறேன்னு சொன்னானாம் !)


மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

7/17/11

22

வெண்பா எழுதுவது எப்படி?

|

யாப்பருங்கலத்தை அலசி ஆராய்வதற்காகத்தான் இவ்வலைப்பூவை நாம் ஆரம்பித்திருந்தாலும், வெண்பா எழுதுவது எப்படி எனச் சற்றுத் தனித்துப் பார்ப்போம்!
தமிழின் பெருங்கொடைகளுள் வெண்பாவும் ஒன்று!தமிழ்க் கவிதையின் பெரும்பிரிவுகளுல் ஒன்றான வெண்பாவுக்குத் தனியிடம் உண்டு.வெண்பாவானது பாடுவதற்குச் சற்றுக் கடினமானதும்,நுட்பமானதும், படிப்பதற்கு இன்பமானதுமாம்.வெண்பா என்றாலே என்னவோ ஏதோ எனத் தெறிப்பவர்க்கும்,அஃது ஏதோ ஒரு புரியாத புதிர் என்பவர்க்கும்,நமக்கெல்லாம் அவ்வளவு எளிதில் வெண்பா வராது என்பவர்க்கும்,அதன் அழகையும் .இயற்றும் முறையையும்,விளக்குவதும் வெண்பா என்பது எவ்வளவு வசீகரமான ஒன்று என்பதைப் புரிய வைப்பதும்,இவ்விடுகையின் நோக்கம்.தமிழில் குறிலும் நெடிலும் தெரிந்திருந்தால் போதும், வெண்பா  இயற்றி விடலாம்.

வெண்பாவுக்கென்றுள்ள விதிமுறைகளை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.ஓர் எழுத்து மாறும்போதுகூட வெண்பா இலக்கணம் கெட்டு, பாடலே சிதைந்துவிடும்.
#வெண்பா இரண்டு அடிகளுக்குக் குறையாமல் வர வேண்டும்.
#இயற்சீர் மற்றும் வெண்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும்.
#ஒவ்வோரடியும் நான்கு சீர்கள் பெற்றும் , ஈற்றடி ( இறுதியடி ) மட்டும் மூன்று சீர்கள் பெற்றும் வர வேண்டும்.
#ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு, என்னும் வாய்பாடுகளுள் ஒன்றினைப் பெற்று வருதல் வேண்டும்.
#செப்பலிசை பெற்று வர வேண்டும்.

மாமுன் நிரையும், விளமுன் நேரும், காய்முன் நேரும், வருவனவே வெண்பாவுக்குரியவை.ஒவ்வோரடியிலும் நான்கு சீர்கள் ( அளவடி) வரவேண்டும் எனப் பார்த்தோம்.இச்சீர்கள் ஈரசைச்சீர்களாகவோ (இயற்சீர்) காய்ச்சீராகவோ மட்டுமே வெண்பாவில் இருக்க வேண்டும் .
ஈரசைச் சீர்களாவன,
                        நேர்நேர் - தேமா
                       நிரைநேர்-புளிமா
                       நேர்நிரை- கூவிளம்
                      நிரைநிரை- கருவிளம்

காய்ச்சீராவது நேரசையில் முடியும் மூவசைச் சீராகும்.ஒருசீர் நிரையசையில் முடிந்தாலோ, காயில் முடிந்தாலோ அதற்கு அடுத்து வரும்சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.நேரசையில் ஒரு சீர் முடிந்தால் அடுத்த சீர் நிரையசையில் தொடங்க வேண்டும்.இவ்வளவுதான் தளை!
நேர், நிரை என்று சொன்னோமே , அப்படிஎன்றால் என்ன?
#குறில் தனித்தும் (எ.கா:   'க' )
#குறில் தனித்தும் ஒற்றடுத்தும் (எ.கா:    'கல்")
#நெடில் தனித்தும் (எ.கா: 'நா')
#நெடில் ஒற்றடுத்தும் (எ.கா:  'நாள்')

வருவனவெல்லாம் நேர் அசையாகும்.


#குறிலிணைந்தும் (எ.கா: ' பல')
#குறிலிணைந்தும் ஒற்றடுத்தும் (எ.கா: ' களம்')
#குறில் நெடில் இணைந்தும் (எ.கா:   ' பலா')
#குறில் நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் (எ.கா:  'விளாம்')
வருவனவெல்லாம் நிரையசையாகும்.

ஈற்றடியின் ஈற்றுச் சீர் மட்டும், தனித்த நேரசையாகவோ, நிரையசையாகவோ வருதல் வேண்டும் அல்லது குற்றியலுகரத்துடன் சேர்ந்த நேரசையாகவோ , நிரையசையாகவோ வருதல் வேண்டும். குற்றியலுகரம் அறிய :(http://sezhunkaarikai.blogspot.com/2011/06/blog-post.html)
 சூரல் பம்பிய சிறுகான் யாறு' என்ற தலைப்பில் அண்மையில் நான் எழுதிய மரபுச் செய்யுள் தொகுப்பில் முத்தத்துவம் என்ற தலைப்பில் நான் எழுதிய வெண்பாக்களுள் ஒன்றை எடுத்துக் கொண்டு விளக்கலாமென விரும்புகிறேன்.

"கள்வடியும் பூவிதழ்க் காரிகையைக் கைகளில்
அள்ளினேன் பந்துபோல் அப்படியே - துள்ளும்
இதழில் கவிதை எழுதினேன் சொர்க்கக்
கதவும் திறந்தது கண்டு"

இவ்வெண்பா நேரிசை வகையைச் சேர்ந்தது. ஒவ்வொரு சீராக, அசையாக, தளையாக, அடியாகப் பார்ப்போம்.
முதல் அடியில் முதற்சீர்
கள் வடி யும் - இது மூவசைச் சீர் . காயில் முடிந்துள்ளது
கள் - குறில் ஒற்றடுத்தது - நேர்
வடி - நெடில் இணைந்தது - நிரை
யும் - குறில் ஒற்றடுத்தது - நேர்

கூவிளங்காய் வாய்பாட்டில் காய் என முடிந்துள்ளதால் , அடுத்த சீர் நேரசையில்தான் தொடங்க வேண்டும்.
இரண்டாவது சீர்
பூவிதழ்க் - ஈரசைச்சீர்
பூ - நெடில் தனித்தது - நேர்.
விதழ்க் - குறிலிணைந்து ஒற்றடுத்தது - நிரை
முதற்சீர் காயில் முடிந்ததால் , இரண்டாவது சீர் நேரில் தொடங்கியது. அதேபோல , இரண்டாவது சீர் நிரையில் முடிந்ததால் மூன்றாஞ்சீர் நேரில் தொடங்கியது.

கா/ ரிகை /யை -     நேர்நிரைநேர்-கூவிளங்காய்
கை/களில்/-             நேர்நிரை -கூவிளம்
அள்/ளினேன் -       நேர்நிரை-கூவிளம்
பந்/துபோல்-           நேர்நிரை-கூவிளம்
அப்/படி/யே/-           நேர்நிரைநேர்-கூவிளங்காய்
துள்/ளும்/-                நேர்நேர்-தேமா
இத/ழில்/-                  நிரைநேர்-புளிமா
கவி/தை/-                 நிரைநேர்- புளிமா
எழு/தினேன்/-         நிரைநிரை-கருவிளம்
சொர்க்/கக்/-            நேர்நேர்-தேமா
கத/வும்/ -                  நிரைநேர்-புளிமா
திறந்/தது/-               நிரைநேர்/புளிமா
கண்/டு-                     நேர்பு- காசு

நிரையிலும் காயிலும் முடிந்த சீர்களெல்லாம் நேரில் தொடங்குவதையும், நேரில் முடிந்த சீர்களை அடுத்து வருபவையெல்லாம் நிரையில் தொடங்குவதையும் பார்க்கலாம்.வெண்பா எழுதும்போது கவனிக்கவேண்டிய பொதுவான சிலகருத்துக்கள்:
#வெண்பாவுக்குப் பொழிப்பு மோனை வருதல் சிறப்பு.
ஓரடியின் முதற்சீரும் மூன்றாம் சீரும் ஓரினிவெழுத்துகளால் அமைய வேண்டும்.
மேற்கண்ட பாடலில்,
"ள்வடியும் பூவிதழ்க் காரிகையைக் கைகளில்
ள்ளினேன் பந்துபோல் ப்படியே - துள்ளும்
தழில் கவிதை ழுதினேன் சொர்க்கக்
தவும் திறந்தது ண்டு"
வண்ணமிட்டுக் காட்டப்பட்டவை பொழிப்பு மோனையாகும்.
#எதுகை நயம் பெறாது வருதல் வெண்பாவுக்கு அழகன்று!அடியின் முதற்சீரில் இரண்டாமெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகையாகும். பாடலைப் பாருங்கள்!
"கள்வடியும் பூவிதழ்க் காரிகையைக் கைகளில்
ள்ளினேன் பந்துபோல் அப்படியே - துள்ளும்
ழில் கவிதை எழுதினேன் சொர்க்கக்
வும் திறந்தது கண்டு"

நேரிசை வெண்பாவினிரண்டாம் அடியின் இறுதியில் வரும் தனிச்சொல்முதற்சீரின் எதுகையைப் பெறுதல் வேண்டும்.
#செப்பலிசை என்பது இருவர் உரையடிக் கொள்ளுதல் போன்று அமையும்.வெண்பாக்களை வாய்விட்டு ஓசை நயத்துடன் பலமுறை சொல்லச் செப்பலிசை புலப்படும். அதனை உணர்ந்த பிறகு, செவிகளால் கேட்பதன் மூலமே ஒரு வெண்பாவானது தளை தட்டுகிறதா, பிழையில்லாமல் பாடப்பட்டுள்ளதா எனக் கண்டுகொள்ளலாம்.

#மூவசைச் சீரின் இரண்டாம் அசையானது, 'விளாம்' ஆக வரக்கூடாது.வரின் ஓசை சிதையும். 
சான்று:- போய்/விடா/மல்/-நேர்நிரைநேர்-கூவிளங்காய்
இது வெண்பாவில் வரக்கூடாது.
'விடா' என்பது குறில் நெடில் இணைந்த நிரையசை. இத்தகைய நிரையசை இயற்சீரில் வரலாம்.வெண்சீர் என்னும் மூவசைச்சீரின் இடையில் வரக்கூடாது.நாம் சான்று காட்டிய பாடலில், கா/ரிகை/யை/- என்னும் மூவசைச்சீரின் ரிகை என்பது குறில் நெடில் இணைந்த நிரையசை தான் எனினும், இங்கு என்பது குறுகி ஒருமாத்திரை யளவினதாய் ஒலித்து ஐகாரக் குறுக்கமாகிவிடுவதால், செப்பலிசை சிதைவதில்லை.
#விகற்பங்கள், மோனை, எதுகைவகைகள், ஆசு முதலியவற்றையும்வெண்பாவின் வகைகள் மற்றும் இனங்கள் ஆகியவற்றையும் யாப்பருங்கலக் காரிகைப் பாடல்களை நாம் ஒவ்வொன்றாக விளக்குகையில் கண்டுகொள்லலாம்.

#நளவெண்பாவை நான்குமுறை படிக்க வெண்பா எளிதில் கைவரப் பெறும்.முன்னர்ச்சொன்ன "சூரல் பம்பிஒய சிறுகான் யாறு" நூலில் வெண்பாவின் இலக்கணத்தை வெண்பாவிலேயே பாடியிருக்கிறேன்.மேலும் வெண்பா தவிர அனைத்துப் பாக்கள் மற்றும் பாவினங்களையும் இலக்கண விள்க்கத்துடன் பாடியுள்ளமை கண்டுகொள்ளலாம்.

# வெண்பா எழுதுவதும் ஒரு கணித சூத்திரம் போலத்தான். நுட்பமான அழகுடையது வெண்பா.புலமை கைக்கூட எளிதாகும்.
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto