8/16/11

ஒரு சாண் வயிறு

|
1.வீட்டில் பெண்களும், ஓட்டல் மற்றும் விருந்துகளில் ஆண்களும்தான் பெரும்பாலும் சமைப்பதைக் கண்டிருக்கிறேன்.இன்று கோயம்புத்தூரில் ரெயில் நிலையம் அருகில் அக்ஷயா HOMELY மெஸ்ஸில்மதிய உணவு அருந்தினேன்.முழுக்க முழுக்கப் பெண்களே நடத்தும் உணவகம் அது.சமையலர், சப்ளையர், மேசை துடைப்பவர்,முதல் கல்லா வரை எல்லாமே பெண்கள்தாம்.வீட்டுச் சமையல் போல இருந்தது. உறைப்பும் கார்ப்புமான நாவில் நீர் ஊறச் செய்யும் அசைவ உணவுவகைகள்.ஆட்டு   மூளை வறுவல் வெறும் 25 ரூபாய்தான் விலையிட்டிருந்தார்கள்.மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரை மட்டுமே சேவை உண்டு. ஞாயிறு விடுமுறை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சினிமா காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம், சினிமாப் படக் கம்பெனிகள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,, காவல் துறை அலுவலகம், வங்கிகள் எனக் கூட்டம் அலைமோதும் இடம் அது
உண்டு முடித்து வெகு நேரமாகியும் அந்தத் திருப்தி இருந்தது.வயிற்றுக்கு எந்த ஒரு நெருடலுமே இல்லை. நன்றாக இருந்தது எனப் பாராட்டி விட்டு வந்தேன் கல்லாவில்..
2.சென்ற வாரம் திருச்சி சென்றிருந்தேன். சைவ உணவகம் ஒன்றில் மதிய உணவு முடித்து விட்டு நானும் எனது நண்பரும் எழுந்தோம். என்ன காரணத்தினாலோ நாங்கள் இருவருமே அன்று தயிரைத் தொடவில்லை. மேசையைச் சுத்தம் செய்ய வந்த முதியவர் தயிர்க்கிண்ணங்களைப் பார்த்துவிட்டு அங்கு சூபர்வைசர் போல இருந்த ஒருவரிடம் ஏதோ சென்று கேட்டார்.அவர் மேசைக்கு வந்து இரண்டு கிண்ணங்களிலுமிருந்த தயிரை எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அந்த முதியவரிடம் கொடுத்தார்.அவர் அதைப் பத்திரமாக ஒரு சன்னலில் வைத்துவிட்டு, மேசையைச் சுத்தம் செய்தபின் வேக வேகமாகக் குடித்தார்.எனக்கு மனதை என்னவோ செய்தது.ஒவ்வொரு நாளூம் எததனையோ கோடிப்பேர் இரண்டு வேளை உணவுடன்தான் உறங்கச் செல்கின்றனர் எனப் புள்ளிவிவரங்களில் படித்திருக்கிறேன்.. ஆனால் ஓட்டல்களில் நாள்தோறும் வீணாகும் உணவுப் பொருட்கள்தாம் எத்தனை எத்தனை? கிண்ணங்களில் கொண்டு வந்து பரிமாறும் முறையை ஒழித்தாலே எவ்வளவோ பொருட்கள் வீணாவது தவிர்க்கப்படும். பஃபே முறையிலும் அதிகமாக வீணாகாது.
எல்லாரும் பசியாறி இன்புற்றிருக்கும் நாள் வரவேண்டும்.

3.கோயம்புத்தூரில் சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கியர்ஸ் கேண்டீனில் பலமுறை உணவருந்தியிருக்கிறேன்.சாந்தி கியர்ஸ்  என்பது பன்னாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம்.அதன் விளம்பர வாசகங்களில் "TURNING THE WHEELS OF INDUSTRIES" என்பது என்னுடைய மிக விருப்பமான வரிகளுள் ஒன்றாகும்.பலவகையான சமூகத் தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள நிறுவனம் அது.அந்த கேண்டீனில் ஒருமுறை ஏறத்தாழ ஐந்நூறுபேர் சாப்பிட முடியும் எனக் கணிக்கிறேன்.சுயசேவை முறையில் இயங்கும் உணவகம் அது.மிகமிகச் சுவையான, பலவிதமான சைவ உணவுகளை, நன்கு பராமரிக்கப்படும் அறையில் பல ஊழியர்களின் பணியில் வழங்குகிறார்கள்.நாங்கள் நான்கு பேர் வயிறார முழு இரவுணவு உண்டும் எண்பத்தெட்டு ரூபாய் மட்டுமே பில் வந்தது. மதிய உணவு வெறும் இருபத்தைந்து ரூபாய்.அங்கு சாப்பிட்ட மசாலா தோசை இன்னமும் என் விரல்களிலும் நாவிலும் மணக்கிறது.உண்டி கொடுத்தோன் உயிர் கொடுத்தோன் என்பார்கள். வாழ்க அந்த வள்ளல் பெருமான்.ஏற்கனவே காசு வாங்காமல் உணவளிக்கும் அன்னலட்சுமி என்ற உணவகம் கோயம்புத்தூரில் இயங்கி வருவதைப் பற்றி எழுதியிருந்தேன்.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
வாக்களிப்புப் பட்டைகள்

0 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto