8/27/12

5

பதினாறு பேறுகள்

|

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று சொல்கிறார்களே,, அந்தப் பதினாறு என்னென்ன என்று கேட்டிருந்தார் அன்புக்குரிய GM.BALASUBRAMANIYAM  அவர்கள்.. இதோ...

புகழ்
கல்வி
ஆற்றல்
வெற்றி
நன்மக்கள்
பொன்
நெல்
அறிவு
பெருமை
ஆயுள்
நல்லூழ்
இளமை
துணிவு
நோயின்மை
நுகர்ச்சி
பொருள்

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

8/26/12

8

பசி வந்தால் பறக்கும் பத்து எவை என்று தெரியுமா?

|
பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே ... அந்தப் பத்து என்னென்ன என்று தெரியுமா? நல்வழியில் ஔவையார் கூறுகிறார். பாடலைப் பாருங்கள்... பசி வந்து விட்டால் என்னவெல்லாம் நம்மை விட்டுப் பறக்கின்றன என்று..


மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவமுயற்சி தாளாண்மை - தேனின் 
கசிவந்த சொல்லியற்மேற் காமுறுதற் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

8/19/12

4

தூய தமிழ்ச்சொற்கள்

|

நிஜம் - உண்மை
நிஷ்டை - தூக்கம், உறக்கம்
சுபாவம் - இயல்பு, தன்மை
சுபிக்ஷம் - செழிப்பு, வளமை
கூஜா - குவளை
அவஸ்தை - துன்பம்


தூய தமிழ்ச்சொற்களை  வலைப்பூக்களில் பயன்படுத்துவோம்..
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

8

சாய்னா நெஹ்வால்----வாழிய பல்லாண்டு..!

|

பொன்மகள் போற்றுதும் பொன்மகள் போற்றுதும்
வெண்கலம் வீரத்துடன் வென்று கொடுத்துநம்
பெண்குலம் சிறப்பித்த தால்.               (சிந்தியல் வெண்பா)

தங்கத்தைத் தவற விட்டாலென்ன...? வெண்கலம் வென்று வந்தவளே ஒரு தங்கமகள்தானே...?


                சாய்னா நெஹ்வால்
             (வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா)

விறகுதள்ளி யரிசியிட்டு விதியதன் மேல் பழிசுமத்திZ
இறகுகிள்ளிச் செவிகுடைந்த வழக்கமெலா மொழிந்ததுகாண்
இறகணிந்த சிறுபந்தா லிருபஃதே யகவைகொண்ட‌
திறம்மிகுந்த வொருமங்கை திசைபலவு முலவிவந்து
குவித்தவெற்றி யரும்பெண்ணைக் குலத்திற்கே பெருமையாம்
புவிப்பந்தில் நம்நாடும் பூண்டதுகாண் புதுவாகை
                                                                                             (தரவு)

ஆந்திரத்துத் தலைநகராம் ஐதராபாத் தினில்பிறந்து
தேர்ந்திறகுப் பந்தாட்டந் தினந்தோறும் பயிற்சிபெற்று
உலகளவில் பலபோட்டி கலந்துவெற்றி           வலம்வருஞ்சீர்
நலமிகுந்த விளஞ்சாய்னா நேவல்வா ழியநெடுநாள்!
அதிவிரைவில் முதலிடத்தைத் தரவரிசை   தருமெனலாம்
பதக்கங்கள் பலவள்ளிப் பட்டங்கள் பலசூடி
நம்மினிய நாட்டுக்குப் புகழ்சேர்க்கப் புறப்பட்ட‌
விம்முதிறஞ் சிறந்தவேள விளையாடு! புகழ்சூடு!!
கரமடைந்த வலைமட்டை களஞ்சுழலுங் கூர்வாளோ
உரம்படைத்த உளங்கொண்டு களவெற்றி குவிப்பாளோ
அணிகலனாய் நாட்டுக்கே ஆகிவிட்ட நேவாலோ
மணிமகுடந் தனையணிந்து மனதெல்லாம் நிறைவாளோ
                                                                                                          (தாழிசை)

கடல் மணல் நெடுமலை படரொலி விரிவெளி
கதிரொளி நிகரவள் புகழ்!
சுடர்மிகுந் தொளிர்ந்தடித் தினிதுள வலிமிகு
வளம்பெறு நறுந்திரு மகள்!
கடன்பணி பெருந்திறன் உளவளம் திடமனம்
விளைநில மவளதன் பொருள்!
நடம்புரி பவளென விழிகளில் விழுமவள்
திடலினற் சுழன்றொளிர் நிழல்!
                                                                                           (வண்ணகம்)

அடைந்தனர் பெருமை அளவிலாது பெற்றோர்
அடைந்தனர் அவளை மகளென வரமாய்
அவையத்து முந்தச் செய்தனரவர் நோற்றதென்ன
தவமெனவுல குவியப்பத் தந்தனள் மகள்  
                                                                                               (பேரெண்)

திறமையின் பிறப்பிடமாய்த் திகழ்கின்றவள் சாய்னாவே!
அமைதியி னிருப்பிடமாய் யமைந்தவளும் சாய்னாவே!
களத்தினில் கடுமையைக் காட்டுபவள் சாய்னாவே!
உறுதியி னுண்மை யுருவமும் சாய்னாவே!
                                                                                              (அளவெண்)

தூள்கிளப்பத் தினவெடுக்குந் தோள்
      துல்லியமாய்க் கணித்தெடுக்குங் கண்
வாள்சுழற்றும் வடிவத்துக் கை
      வரலாறு படைத்துவரு முளம்
நாள்கணக்கில் பயிற்சிபெறும் மெய்
      நாற்றிசையும் தரைபறக்குங் கால்.
கோள் பலவும் பறக்குமவள் கொடி
     கொட்டும்புக ழவளதுகா லடி
                                                                                        (இடையெண்)

                          திறனு மவள்
                                              தீரமவள்
                                                            திடனுமவள்
                          அறமு மவள்
                                              அருமை யவள்
                                                            அமைதி யவள்
                          செறிவு மவள்
                                              சீர்மையவள்
                                                            சிறப்பு மவள்
                         அறிவு மவள்
                                             ஆழ மவள்
                                                           ஆழியவள்
                                                                                          (சிற்றெண்)

     எனவே
                                                                                          (விட்டிசை)


சாய்னா நேவால் சாதித் தேமெய்
ஓய்ந்தா லும்புகழ் ஒழியா தென்று
கூறுவன் பெருமை யோடு
வேறுக ருத்தின் றியே!                                        (சுரிதகம்).


ஒரு தரவு , மூன்று தாழிசைகள், விட்டிசை, போக்கியல் என்பன வந்து முறையே பொருந்தி நிற்கும் நேரிசை யொத்தாழிசைக் கலிப்பாவே, நீரின் திரை போலும் முறை பொருந்தி வருகின்ற அளவடியாக நாற்சீரடி, நாற்சிரோரடி, முச்சீரடி . ஒருசீரடி (பேரெண்,அளவெண், இடையெண்,சிற்றெண்) யென்னும் அம்போதரங்கம் நடுவே மடுக்கப்படுமாயினஃது அம்போதரங்க வொத்தாழிசைக்   கலிப்பாவாகும்.அம்போதரங்க உறுப்பின் முன்னே வண்ணகம் என்னும் முடுகியல் வரப்பெற்ற மற்றைய தரவு, தாழிசை, கூன் அடக்கியல் என்னுமுறுப்புகளுமுளதாகப் பெறுமாயினது வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவாகும்.


மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

8/18/12

6

யாப்பருங்கலக்காரிகை - அவையடக்கம்

|


                                       அவையடக்கம்
சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர் முன் யான் மொழிந்த‌
பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப்
பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்
இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே!

       அவையடக்கத்தை முன்னர்க் கண்டோம். இப்பாடலில் மீண்டும் அவையடக்கத்தை
வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
                                     பதவுரை
சுருக்கமில் -    அளவிலா
கேள்வி -    கேள்வியறிவு
துகள் -    குற்றம்
மொழிந்த -    கூறிய‌
பருப்பொருள் -    (சிறப்பற்ற) பிண்டப்பொருள்
விழுப்பொருள் -   சிறந்த பொருள்
மால் -    பெரிய‌
பொருப்பகம் -   மலை
இருநிலம் -   உலகம்
                                                 தெளிவுரை
   அளவிலாத கேள்வியறிவினையுடைய குற்றமற்ற புலவர்களின் முன்
நான் கூறிய இச்சிறப்பில்லாத பாடு பொருளும் பனிபடர்ந்த பெரிய இமயமலையை
அடைந்த இழிவான கரிய காக்கையும் பொன்னிறமாய்த் தெரிவது போல சிறந்த‌
நுண்பொருளாக இந்த உலகம் உரைக்கு மல்லவா.

                                                  கருத்துரை
 கரிய இழிவான காக்கையும் இமயமலையை அடைந்து பொன்னிறமாய்
ஒளிர்வது போல மதிநிறைந்த புலவர்கள் முன் எனது நூலும் சிறப்பாகி விடுகிறது.
என்று ஆசிரியர் அவையடக்கத்துடன் கூறுகிறார்.     
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

8/11/12

6

இரவின் பாடல்-நள்ளிரவில் எழுதுகிறேன்

|
இரவின் பாடல்

வழிந்தோடும் இருளில்
வாய்த்த வலிகளற்ற
சஞ்சாரம்
நீண்டு கொண்டே செல்கிறது.
திசை நிரப்பும் கருமை
மெலிதான குரலில்
இரவின் தீரா வேட்கையை
முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிறது.
ஏதோ ஒன்றைச் சொல்ல
எந்நேரமும்
இரவு முயன்றுகொண்டே இருக்கிறது.
இன்றுவரை
அஃது என்னவென்று
சொல்லிவிட்டதா இல்லையா
என்பது மட்டும் புரியவே இல்லை.

இந்த இரவுதான் போகுதே போகுதே இழுத்துக் கட்ட கயிறு கொண்டு வா நண்பனே நண்பனே என்ற திரைப்பாடலினை  அண்மையில் கேட்டேன்.வசீகரிக்கும் வரிகளும், மயக்கும் இசையும் வழிந்தோடும் அப்பாடலினை மீண்டும் கேட்கத் தோன்றியது. காணொளியுடன் பார்த்த போது இரவின் மீதான காதல் எல்லாருக்கும் ஒருவிதத்தில் எப்பொழுதும் அல்லது எப்பொழுதாவது பீறிட்டுக் கொண்டுதான் இருக்கிறது எனத் தோன்றியது.பொய்யான வாழ்வில் மெய்யான இன்பந்தரும் மது போதையோ (பாடல் வரிகள்), இலக்கிய இன்பமோ,வாசித்தலின் சுகானுபவமோ, கூடிக்களித்தலின் பேரின்பமோ எதுவோ ஒன்று இரவின் நிறத்தை மாற்றிக் கொண்டேதான் இருக்கிறது.
இரவானது நள்ளிரவாகப் பரிணமிக்கும்போது அதன் நிறமும் அடர்த்தியும் மாறத் தொடங்கி விடுகிறது.பகல்பொழுது இரவையும், இரவு பகலையும் துரத்திப் பிடித்து விளையாடுவது போலத் தோன்றுகிறது.இரவில்லா உலகம் அழகை இழந்துவெறுமையாக்த்தான் இருக்கும்.இரவு , உலகையும் , வாழ்க்கையையும் பொருள் நிரம்பியதாக்குகிறது.சலனமற்ற மனது பெரும்பாலும் இரவில்தான் சாத்தியப் படுகிறது.பகலின் எச்சங்களும் மிச்சங்களும்விழித்திருப்பவனின் நள்ளிரவுகளில் வெவ்வேறு வடிவங்களில் மறுபிறப்பெடுக்கின்றன.பெய்யும் இருளைக் கிழித்து ஊடாட எப்போதும் நம்மிடம் ஓர் ஏக்கமோ, கவலையோ, பகல்பொழுதின் பெருமகிழ்ச்சியோ இருந்து கொண்டேதான் இருக்கிறது. விழித்திருப்பவனின் இரவு . இரவின் ருசி, தேசாந்திரி ...இவற்றையெல்லாம் படித்துப் பாருங்கள்.
சித்தார்த்தன் பார்த்த அதே நிலவைத்தான் தானும் பார்த்ததாக எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.இரவைச் சுவைத்துப் பருகுபவர்க்கே அவ்வுணர்வு வாய்க்கும்.ஒரு தூக்குக் கைதியின் கடைசி இரவை வைரமுத்து வர்ணிப்பார்.வேர்கள்  நீர்குடிக்கும் ஒலியும் , நிலவு வளரும் ஒலியும் எல்லார் செவியிலும் விழாது.
இரவு நமக்காக எத்தனையோ வைத்திருக்கிறது.அது நமக்காகப் பகல் முழுதும் காத்துக்கொண்டிருக்கிறது.நோயுற்றவனுக்கு அச்சத்தைத் தருகிறது.நோயாளியின் இரவு நீளமாக இருக்கிறது.முதிர்கன்னியின் இரவில் அனல் தகிக்கிறது.வேலையில்லாதவனின் இரவு விரக்தியைத் தரிக்கிரது.பயணம் செபவனின் இரவும் , மாணவர்களின் இரவும் மிகக்குறுகியதாக இருக்கிறது.காதலிப்பவனின் இரவு அவஸ்தையாகக் கழிகிறது.கவிஞனின் இரவு வண்ணக்காடாய் ஜொலிக்கிறது.


இரவின் குரல் இனிமையானது. அதன் வரிகள் நுட்பமானவை.இரவின் இசை மனதின் இடுக்குகளில் எல்லாம் காற்றைப் போல நிரம்புகிறது.இரவின் விரலைப் பிடித்துக் கொண்டு நெடுந்தொலைவு நடக்கும் வாய்ப்பு நம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.இத்தனைக்கும்
காற்றைப் போல , நீரைப்போல இயற்கையின் தீராத உற்பத்திப் பொருள் அது. நாள்தவறாமல் இரவு நம்மைக் கடந்து செல்கிறது.
என்னை அதிரவைத்த சேரனின் குறுங்கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.படித்து முடித்து நெடுநேரமாகியும் அந்தப் பாதிப்பிலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் மீளவே இல்லை.எனது மொத்த வாசிப்பு அனுபவத்திலும் என்னைப் புரட்டிப்போட்ட கவிதை அது.

        யமன்
காற்ரு வீசவும்
அஞ்சும் ஓர் இரவில்
நட்சத்திரங்களுக்கு இடையே
இருக்கிற
அமைதியின் அர்த்தம்
என்னவென்று
நான் திகைத்த ஒரு கணம்
கதவருகே யாருடைய நிழல் அது....?

இரவைப் பருகுங்கள்..இரவைச் சுவாசியுங்கள்..இரவிலும் வாழுங்கள்...!மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

8/8/12

6

அட ... நாமளும் ஃபேமசாயிட்டோம்.....

|
வாழ்க போட்டோபுனியா....

வாழ்க போட்டோபுனியா....

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3

கொல்லாதே...!

|

உனக்கு 
ஓட்டுநர் உரிமம்
யார் கொடுத்தது?
ஸ்கூட்டி பெப்பில் வந்து
மோதாமலேயே
தினமும்
ஓராயிரம் பேரையாவது கொல்கிறாய்....!
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

8/5/12

3

தூய தமிழ்ச்சொற்கள்,

|

மரியாதை - கண்ணியம், மாண்பு,மதிப்பு,மாட்சி
மவுனம் - அமைதி
மனோகரம் - அழகு,எழில்
மனோபாவம் - மனநிலை
மாதம் - திங்கள்
மனுஷன் - மனிதன், மாந்தன்
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

8/4/12

7

விண்மீன்களை என்ன செய்தாய்...?

|


எனது தூக்கத்தைத்தான்
பறித்து விட்டாய்..!
இந்த விண்மீன்களை 
என்ன செய்தாய்...
இரவு முழுக்கத் தூங்காமல்
முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்றன...!
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

8/3/12

2

யாப்பருங்கலக்காரிகை -பாயிரம்- உரை

|
                                                         பாயிரம்
                                                அவையடக்கம்
தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீரருவிக்
கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்
யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்
ஆனா வறிவின வர்கட்கென் னாங்கொலெ னாதரவே!
                                                                                  யாப்பருங்கலக் காரிகை‍‍‍‍‍‍ - 2.


"ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிரமல்லது பனுவலன்றே" என்று சொல்வர். காரிகையாசிரியரும் இதில் தவறாது பாயிரத்துடன் தொடங்குகிறார்.
                      அக்காலத்தில் நூலாசிரியர் தனது நூலினைக் கற்றோர் அவையில் அரங்கேற்ற‌ வேண்டும். அவையோரது ஐயங்களை அகற்றிய பின்னரே நூலானது அரங்கேறும். எனவே நூலின் அருமையையும், நூற்பொருளின் தன்மைகளையும் முதலில் அவையோரிடத்து அறிவித்துத் தனது எளிமையையும் நூலாசிரியர் புலப்படுத்துவது வழக்கம்.
                   ஆன்றோர் நிறைந்த அவையில் தனது அடக்கத்தைக் கூறிவிடுவதாலும்  இதனால் அவையோர் மிகைபடக் கேளாது மென்மையாக அடக்கப்பட்டு விடுவதாலும் இஃது அவையடக்கமாயிற்று.
            இப்பாடலில் நூலாசிரியர் தனது அடக்கத்தை உரைப்பது காண்போம்
                                                            பதவுரை
தேனார் ‍          -  தேன் பொருந்திய‌
தொங்கல்      - மாலை
மீனவன்         - மீனக் கொடியுடைய பாண்டியன்
கேட்ப             - கேட்க, கேட்கும்பொழுது
தெண்ணீர்     - தெளிந்த நீர்
கான்                - சோலை
அருந்தவன்  - அரிய தவ முனிவனாகிய அகத்தியன்
நகை                - சிரிப்பு
யானா             -  நானா
ஆனா              - குறையாத‌
கொல்             - அசைச் சொல்
ஆதரவு           - துணிவு.
                                                 தெளிவுரை
             தேன் ஆர் கமழ்தொங்கல் மீனவன் கேட்ப -தேன் பொருந்திய மணங்கமழும் வேப்ப மாலையைச் சூடிய பாண்டிய மன்னன் கேட்க,
            தெண்ணீர் அறுவிக் கானார் மலயத்து அருந்தவன் சொன்ன‌-  தெளிந்த நீரையுடைய அருவி சூழ்ந்த சந்தனக்காடுடைய பொதிய மலையில் அரிய
தவமேற்கொண்ட அகத்தியன் கூறிய 
கன்னித் தமிழ் நூல். -
அழிவற்ற இளமையான தமிழின் யாப்பிலக்கண நூலினை 
யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகை தருமால்- சிறியவனாகிய நானா எழுதுகிறேன் என்று எண்ணும் போது எனக்கே சிரிப்பு மேலிடுகிறது.
            ஆனா அறிவினவர்கட்கு என்னாங்கொல் என் ஆதரவே -அப்படியிருக்க குறையாத அறிவு மிகுந்த ஆன்றோரிடத்து எனது இந்தத் துணிவு என்ன ஆகுமோ, நான் அறியேன்!
                                                              கருத்துரை
            தான் எழுதிய இந்நூலை அறிஞர் பெருமக்கள் என்ன சொல்வார்களோ என அவையடக்கத்துடன் நூலாசியர் இப்பாடலில் கூறுகிறார்.
          பொதிய மலை என்பது இன்றைய நெல்லை மாவட்டக் குற்றாலச் சாரலாம்.
 மூவேந்தர்க்கும் மாலையும், கொடியும் உண்டு.
 பாண்டியன்  - வேப்ப மாலை, மீன் கொடி.
 சேரன்             - ஆத்தி, விற் கொடி.
 சோழன்          - பனம்பூ, புலிக்கொடி.
 கொல் என்பது அசைச் சொல் ஆகும்.
  அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ என்பது குறள்.
    காரிகை யாவும் ஏகாரத்துடனே முடியுமாதலின் ஆதரவே என்றதுடன் இழிவு சிறப்பையும் நிறுத்துகிறது.   
                             

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

0

கவிஞர்களே வாருங்கள்.. கவிதை எழுதுவோம்

|

முகடு தவழும்
முகில் பொதிகள்;
புழுதி களையும்
மழைத் துளிகள்;
மனது கழுவும்
மதியின் ஒளிகள்;
கனவில் சிரிக்கும் 
கன்னி வெடிகள்;
மிழற்றிப் பிதற்றும்
மழலை மொழிகள்;
அலர்ந்து கவரும்
அழகு மலர்கள்;
ஈர்த்துக் கொல்லும் 
இரண்டு விழிகள்;


கவிதையைத் தொடர்ந்து எழுதி முழுமையாக்குங்கள்...
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3

தூய தமிழ்ச்சொற்கள்

|

பரிகாரம் - மாற்று, திருத்துதல், சரிசெய்தல்
பரிகாசம் -எள்ளி நகைத்தல்
சுங்கம் - வரி , இறை
சுந்தரம் - அழகு , பொலிவு
கறார் - உறுதி
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto