10/29/12

கிறுக்கு முற்றியது

|


கிறுக்கு முற்றியது

                     (தாழிசை)

கண்ணழகுக்கு இவ்வுலகில்

       என்னவிலையும் கொடுக்கலாம்;
கண்ணசைவுக் கட்டளையில்
      காலன்கூட மயங்கலாம்!


உதிர்க்கும் வார்த்தை ஒன்றுக்காக‌

      உலகத்தையே துறக்கலாம்;
உதட்டு வார்த்தை உத்தரவில்
     சொர்க்கம்கூடத் திறக்கலாம்!

பக்குவமாய்ப் படைத்தசாமிக்குப்

      படையல் ஒன்று போடலாம்;
முக்தியடைய அடுத்த பிறவியிலுன்
     முகப்பருவாய்ப் பிறக்கலாம்!


என்னவளே உன்னழகை

      என்ணியெண்ணி வியக்கலாம்;
கன்னியுன்றன் முகத்தைகாட்டிக்
      கல்லைக்கூட மயக்கலாம்!


கன்ணேஉன் கனிமொழியைக்

     காலம்முழுதும் கேட்கலாம்;
புண்ணியமாய்ப் போகுமொரு
     புன்னகை செய் தேவலாம்!


கண்மணியின் காலடியில்

     காலம் முழுதும் கிடக்கலாம்; - உன்
கால்கள்பட்ட இடத்திலெனக்குக்
     கல்லறையே கட்டலாம்!


உன்விழியின் ஒளியதனை

     உலகுமுழுதும் பரப்பலாம்;
இரவுபகல் வேறுபாடே
    இல்லையென்று சொல்லலாம்!


கூந்தலிழை ஒன்றுபோதும்

     குவலயத்தை ஆளலாம்;
ஏந்திழையின் எண்ணங்களை
     எழுத்துவடிவில் தீட்டலாம்!


பாதம் துடைக்க வானிலிருந்து
     மேகத்துணி கிழிக்கலாம்;
பாதம் அழகா? மேகம் அழகா?
     பட்டிமன்றம் வைக்கலாம்!


தலையில் தவழ நிலவும்கூடத்

     தாவிக்குதிக்கப் பார்க்கலாம்;
தவறிவிழுந்த தலைமுடியைத்
     தத்தெடுத்து வளர்க்கலாம்!


கைதவறித் தரையில் விழுந்த

     கைக்குட்டையை எடுக்கலாம்;
காதலுலகின் சின்னமதைக்
     கம்பத்திலே ஏற்றலாம்!


கூந்தல்கண்ட பூவெடுத்துக்

     கொஞ்சிக்கதை பேசலாம்;
தேனில்நனைத்து ஊறவைத்துத்
    திவ்வியமாய்ப் புசிக்கலாம்!




 பூவிதழில் தேந்தடவிப்
     புதையல்ஒன்று செய்யலாம்;
தேவியுன்றன் கன்னக்குழி
     தேடியதை நிரப்பலாம்!


பாதம்பட்ட துளிநீரைப்

     பத்திரமாய் வைக்கலாம்;
பட்டமரம் துளிர்க்குமதைப்
     பக்குவமாய்த் தெளிக்கலாம்!


வெட்டியெறிந்த நகப்பிசிறை

     விண்ணுலகு அனுப்பலாம்;
கட்டழகின் மாதிரியாய்க்
     காட்டிப்பெருமை அடிக்கலாம்!


கால்பதித்த மண்ணெடுத்துக்

     கோயிலொன்று கட்டலாம்;
தேவதையே நீயேதான்
     தெய்வமென்று வணங்கலாம்!


கொலுசுமணியின் தினுசுகண்டு

     கொள்ளையடித்துப் போகலாம்;
கொஞ்சம்சுரண்டி நெஞ்சில் தடவிக்
     காதல்நோயைத் தணிக்கலாம்!

பனிவிரல்கள் என்மீது

      பட்டுவிட நேரலாம்;
இனியுமென்ன உலகிலெனக்கு
       இந்நொடியே சாகலாம்!



(ஈரடியா ணென்சீர் கொண்டமைவனவெல்லாந் தாழிசை யாம்.)


                         (எனது "சூரல் பம்பிய சிறுகான் யாறு" நூலிலிருந்து....!)




வாக்களிப்புப் பட்டைகள்

10 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

திண்டுக்கல் தனபாலன் said... 29/10/12 7:48 PM

ரசித்தேன்...

G.M Balasubramaniam said... 30/10/12 5:04 AM


காதல் வசப்பட்டால் கவிதையும் வசப்படுமோ.?

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 30/10/12 12:53 PM

than q

Reena Rajini dsoza said... 31/10/12 11:47 PM

பட்டி மன்ற தலைப்பு அருமை.....

saaranaadanvarumaaru said... 6/11/12 8:42 AM

அழகுக்கவிதை

அருணா செல்வம் said... 13/11/12 6:53 AM

வணக்கம் கவிஞரே...

கவிதை மிக மிக அருமை.
இரசித்துச் சுவைத்தேன்.

இது என்ன இலக்கணம் என்று சொல்லுங்களேன்... நானும் எழுதிப் பார்க்கிறேன்.
நன்றி.

அருணா செல்வம் said... 13/11/12 6:53 AM

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

அருணா செல்வம் said... 13/11/12 6:55 AM

ஆனாலும் ஒரே பெண்ணை வர்ணிக்காமல்... இத்தனையையும் தனித்தனியாக வர்ணித்து... வீட்டில் திட்டு கிடைக்காதா...?

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said... 12/1/13 7:00 PM


வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

Anonymous said... 13/6/15 6:52 PM

வணக்கம்
தங்ககளின் சூரல் பம்பிய சிறுகான் யாறு நூலை எங்கு வாங்கலாம்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto